தஞ்சையில் 2 பவுன் நகை வாங்கிக்கொண்டு கத்தை, கத்தையாக கள்ளநோட்டுகளை கொடுத்த மர்ம நபர்


தஞ்சையில் 2 பவுன் நகை வாங்கிக்கொண்டு கத்தை, கத்தையாக கள்ளநோட்டுகளை கொடுத்த மர்ம நபர்
x
தினத்தந்தி 21 Oct 2018 4:30 AM IST (Updated: 21 Oct 2018 1:37 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் 2 பவுன் நகை வாங்கிக்கொண்டு கத்தை, கத்தையாக கள்ளநோட்டுகளை மர்ம நபர் கொடுத்து விட்டு சென்றார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி வணிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை எல்லையம்மன்கோவில் தெருவில் நகைக்கடை வைத்து இருப்பவர் விஸ்வநாதன். இவர் தினமும் காலை 10 மணிக்கு கடையை திறந்து விட்டு இரவு 9 மணிக்கு கடையை மூடுவது வழக்கம். நேற்று முன்தினம் விஸ்வநாதன் கடையில் இருந்தார். அப்போது 2 நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

அதில் ஒருவர், மோட்டார் சைக்கிளில் அமர்ந்தவாறு இருந்தார். 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் மட்டும் இறங்கி கடைக்குள் வந்தார். அவர் தனக்கு 2 பவுன் நகை வேண்டும் என்று கேட்டார். அதன்படி அவர் தனக்கு பிடித்த நகையை வாங்கினார். தலா 1 பவுன் எடையுள்ள 2 நகைகளை எடுத்து அதற்கு பில் போடுமாறு கேட்டார்.

அதற்கு கடைக்காரர் நகைக்கான தொகை ரூ.51 ஆயிரத்து 500 வருகிறது என கூறினார். இதையடுத்து அந்த நபர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக 25 நோட்டுகளும், 500 ரூபாய் நோட்டுகள் 3-ம் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்ட கடைக்காரர், நகையை கொடுத்தார். அந்த நபர் நகையை வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி சென்று விட்டார்.

இரவு கடையை மூடிய பின்னர் விஸ்வநாதன், நகை வாங்கிய நபர் கொடுத்த நோட்டுகளை பணம் எண்ணும் எந்திரத்தில் வைத்து சரிபார்த்தபோது அது அனைத்தும் கள்ளநோட்டுகளாக இருந்தது தெரிய வந்தது. புது நோட்டுகளாக இருந்த அந்த நோட்டுகளில் சில நோட்டுகள் ஒரே நம்பர்களை கொண்டதாக இருந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் நேற்று இது குறித்து அவர், வணிகர் சங்க நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் தஞ்சை மாவட்ட வணிகர் சங்க பேரவை நிறுவனர் சீனிவாசன் தலைமையில் நகர தலைவர் வாசுதேவன், நிர்வாகிகள் நசீர், ஆத்மநாபன் மற்றும் நகைக்கடை சங்க செயலாளர் சேகர் மற்றும் நிர்வாகிகள் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து வணிகர்கள் கடைமுன்பு திரண்டு ஆர்ப்பாட்டமும் நடத்தினர். அப்போது அவர்கள், கள்ளநோட்டு புழக்கத்த்தில் விடுபவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டை தடை செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story