வெவ்வேறு விபத்துகளில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் சாவு : 8 பேர் படுகாயம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள வேட்டையபுரத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 37). கூலித்தொழிலாளி. இவரும், இவரது மனைவி தாயம்மாள் என்பவரும் மோட்டார்சைக்கிளில் கிருஷ்ணகிரி - தர்மபுரி சாலையில் அவதானப்பட்டி பக்கமாக சென்று கொண்டிருந்தனர். அந்த நேரம் எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற ஆட்டோ மீது மோட்டார்சைக்கிள் மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த நாகராஜ் பரிதாபமாக இறந்தார். தாயம்மாள் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பெங்களூரு ஆர்.ஏ. சாலையை சேர்ந்தவர் நந்தகோபால். இவரது மகன் கிருஷ்ணபிரசாத் (21). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று இவர் தனது தந்தை நந்தகோபாலுடன் காரில் கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை சாலையில் மத்தூரில் சென்று கொண்டிருந்தார்.
அந்த நேரம் எதிர்பாராதவிதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் கிருஷ்ணபிரசாத் படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே கிருஷ்ணபிரசாத் இறந்தார். நந்தகோபால் காயம் இன்றி தப்பினார். இந்த விபத்து குறித்து மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜோதி (27). மினி பஸ் டிரைவர். இவர் மினி பஸ்சில் பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் சென்னை-பெங்களூரு ரோட்டில் சென்றுள்ளார். கிருஷ்ணகிரி அருகே கந்திகுப்பம் பகுதியில் மினிபஸ் சென்ற போது, முன்னால் சென்ற லாரி மீது மோதியது.
இந்ந விபத்தில், மினிபஸ்சில் இருந்த காஞ்சீபுரம் மாவட்டம், வாலஜாபாத் பகுதியை சேர்ந்த லோகநாதன்(38), சங்கர்(30), தினகரன்(30), கார்த்திக்(30), கோபி(43), ரவிசந்திரன்(43) மற்றும் டிரைவர் ஜோதி ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேப்பனப்பள்ளி அருகே உள்ள அலேகுந்தாணி பகுதியைச் சேர்ந்தவர் முருகேஷ் (27). கூலித் தொழிலாளி. இவருக்கு கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் முருகேஷ் பேரிகை மெயின் ரோட்டில் கே.என்.போடூர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அந்த நேரம் அடையாளம் தெரியாத வாகனம் முருகேஷ் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த முருகேஷ் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வேப்பனப்பள்ளி போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story