தமிழகத்தில் முதன் முதலாக வீணாகும் கசிவு நீரை குழாய் மூலம் குளத்தில் நிரப்பும் திட்டம்; 4 அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
வீணாகும் கசிவு நீரை குழாய் மூலம் குளத்தில் நிரப்பும் திட்டம் தமிழகத்திலேயே முதன் முதலாக சென்னிமலை அருகே தொடங்கப்பட்டு உள்ளது. இதனை 4 அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
சென்னிமலை,
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ளது ஓலக்காடு. இங்கு உப்பிலிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கீழ்பவானி வாய்க்கால் திட்டத்தின் கீழ் பாசனம் பெறுகின்றன. வயல்களில் பாய்ந்த தண்ணீர் உபரி மற்றும் கசிவு நீராக அங்குள்ள ஓடையில் பாய்ந்து நொய்யல் ஆற்றில் கலக்கிறது. ஓலக்காடு வழியாக செல்லும் இந்த ஓடையில் பல ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பணை கட்டப்பட்டு இருந்தது. வறட்சி காலத்தில் இந்த தடுப்பணை வறண்டு கிடந்தாலும் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் விடும்போது தடுப்பணை நிரம்பி வெள்ளம் வீணாக சென்று வந்தது. ஏற்கனவே நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகளால் அந்த தண்ணீர் பயன்படுத்த முடியாத நிலையில், கீழ்பவானி கசிவுநீரும் பயன் அற்றதாக மாறியது.
இந்தநிலையில் ஓலக்காடு தடுப்பணையில் வரும் தண்ணீரை பயன் உள்ளதாக மாற்ற அந்த பகுதி பொதுமக்கள் முடிவு செய்தனர்.
அதாவது, ஓலக்காடு பகுதியில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முருங்கத்தொழுவு கிராமத்தில் 17 ஏக்கர் பரப்பளவில் ஒரு குளம் உள்ளது. இந்த குளம் பல ஆண்டுகளாக தண்ணீர் வரத்து பாதை இல்லாமல் வறண்டு கிடந்தது. இந்த குளத்தை ஓலக்காடு தடுப்பணையில் இருந்து வெளியேறும் தண்ணீரைக்கொண்டு நிரப்ப முடிவு செய்தனர். இதற்காக முருகத்தொழுவு குளம் நீர் நிரப்பும் திட்டம் மற்றும் மேலாண்மைக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினருடன் விஷ்ணு உழவர் மன்றம் மற்றும் பொதுமக்கள் இணைந்து திட்டம் தீட்டினார்கள்.
ஓலக்காடு தடுப்பணையில் இருந்து தண்ணீரை வாய்க்கால் வெட்டி முருங்கத்தொழுவுக்கு கொண்டு செல்ல முடியாது. ஓலக்காட்டில் இருந்து முருங்கத்தொழுவு குளம் 225 அடி உயரம் கொண்ட பகுதியில் உள்ளது. எனவே மின்மோட்டார் பொருத்தி, குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்வது என்று திட்டமிட்டனர்.
இந்த திட்டத்துக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் ஒப்புதல் அளித்தார். மேலும், ஈரோடு எஸ்.செல்வகுமார சின்னையன் எம்.பி. அவருடைய தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.35 லட்சம் வழங்கினார். முருங்கத்தொழுவு கிராம மக்களின் பங்களிப்பாக ரூ.35 லட்சத்து 80 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது. ரெப்கோ வங்கி ரூ.17½ லட்சம் கடன் உதவியாக வழங்கியது. இதில் முருங்கத்தொழுவு குளத்தை தூர்வாரி கரை பலப்படுத்தும் பணிக்கு ரூ.26 லட்சத்து 80 ஆயிரம் செலவானது. மீதமிருந்த ரூ.59 லட்சத்து 30 ஆயிரம் செலவில் குழாய்கள் பதிக்கும் பணி, சூரிய சக்தி மின் மோட்டார் அமைக்கும் பணிகள் நடந்தன. இந்த திட்டப்பணிகளை முருங்கத்தொழுவு குளம் நீர் நிரப்பும் திட்டம் மற்றும் மேலாண்மை குழுவினர் மற்றும் பொதுமக்கள் மேற்கொண்டனர். பணிகள் நிறைவடைந்து திட்டம் தொடக்க விழா நேற்று நடந்தது.
விழாவுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். எஸ்.செல்வகுமார சின்னையன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி, உ.தனியரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் பி.தங்கமணி, தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய திட்டத்தின் செயல்பாட்டை தொடங்கி வைத்தனர்.
ஓலக்காடு தடுப்பணையில் அமைக்கப்பட்டு உள்ள சூரியஒளி மின்சார உற்பத்திக்கான தகடுகள், மற்றும் மின் மோட்டார்கள், கட்டுமான திட்டத்தை பார்வையிட்ட அமைச்சர்கள் அதுபற்றி கேட்டு தெரிந்து கொண்டனர். பின்னர் அங்கு மோட்டாரை இயக்கி வைத்தார்கள். பின்னர் அங்கிருந்து அமைச்சர்களும் அதிகாரிகளும் முருங்கத்தொழுவு கிராமத்துக்கு வந்தார்கள். அப்போது ஓலக்காடு தடுப்பணையில் இருந்து குழாய் மூலம் வந்த தண்ணீர் குளத்தில் பாய்ந்து கொண்டு இருந்தது. அப்போது அங்கு கூடி இருந்த பொதுமக்கள், அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
பின்னர் நடந்த விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:–
காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் ஒரு பகுதி முழுமையாக வறட்சியான பகுதியாகும். மழை இல்லாததே இந்த வறட்சிக்கு காரணம். அதில் முருங்கத்தொழுவு பகுதியும் ஒன்றாக இருந்தது. தற்போது ரூ.86 லட்சத்து 30 ஆயிரம் செலவில் குளத்தில் நீர் நிரப்பும் திட்டம் செயலுக்கு வந்து இருக்கிறது. இதுபோன்ற ஒரு திட்டம் தமிழகத்திலேயே முதன் முதலாக சென்னிமலை வட்டாரத்தில்தான் தொடங்கப்பட்டு இருக்கிறது. இந்த குளத்தில் நீர் நிரப்பினால் சுமார் 4 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு நிலத்தடி நீர் பெருகும்.
தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றபின்னர் குடிமராமத்து பணிகளில் தீவிரம் காட்டப்பட்டது. ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டதால் மழை நீர் அனைத்து பகுதிகளிலும் சேமிக்கப்பட்டு இருக்கிறது. வரலாற்று காலத்தில் நடந்த குடிமராமத்து பணிகளை மீண்டும் வரலாறாக மாற்றியவர் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
இதுபோன்று அனைத்து துறைகளிலும் சிறப்பாக தமிழகம் செயல்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து தமிழகத்தில் முதலீடு செய்ய பலரும் ஆர்வமாக வருகிறார்கள். இதற்கு காரணம் தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்வதுதான். தடையில்லாத மின்சாரமும், சட்டம்–ஒழுங்கு பிரச்சினை இல்லாத நிலையும் இருப்பதால் வெளிநாட்டு முதலீடுகள் மூலம் பல இடங்களில் தொழில்கள் தொடங்கப்பட்டு, அந்த பகுதி மக்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், முன்னாள் எம்.எல்.ஏ. என்.எஸ்.என்.நடராஜ், ஈரோடு ஆர்.டி.ஓ. முருகேசன், தாசில்தார் வீரலட்சுமி, முன்னாள் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கே.வி.மணிமேகலை, அ.தி.மு.க. நிர்வாகிகள் கருப்புசாமி, விஸ்வநாதன், ஜெகதீசன், ஜீவா ராமசாமி, மாநில கோ–ஆப்டெக்ஸ் இயக்குனர் ப.கோபாலகிருஷ்ணன், யூகோடெக்ஸ் தலைவர் எஸ்.கோவிந்தசாமி, சிரகிரி டெக்ஸ் தலைவர் என்.இளங்கோவன், துணை தலைவர் துரைசாமி, அ.தி.மு.க நகர செயலாளர் என்.சேமலையப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ் வரவேற்றார். முடிவில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜய சங்கர் நன்றி கூறினார்.
முருங்கத்தொழுவு குளம் நீர் நிரப்பும் திட்டத்துக்காக தினசரி 125 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் சூரிய மின்தகடுகள் பொருத்தப்பட்டு உள்ளன. 25 குதிரைத்திறன் கொண்ட மின்மோட்டார் அமைக்கப்பட்டு இருக்கிறது. சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் 6 அங்குல குழாய் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ஒரு நிமிடத்துக்கு 1 லட்சம் லிட்டர் தண்ணீரை தடுப்பணையில் இருந்து நீரேற்றம் செய்து குளத்தில் நிரப்ப முடியும். இவ்வாறு தினசரி 20 மணி நேரம் வீதம் 150 நாட்கள் தொடர்ந்து நீரேற்றம் செய்தால் குளத்தில் 9 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கும்.
கீழ்பவானி பாசன கசிவுநீர் வரும் காலத்தில் இது செயல்பட்டால் அந்த ஆண்டு முழுவதும் குளத்தில் தண்ணீர் இருக்கும் என்று மேலாண்மை குழுவினர் தெரிவித்தனர். பல ஆண்டுகளுக்கு பின்னர் முருங்கத்தொழுவு குளத்தில் தண்ணீர் பாய்வதை பார்த்து விவசாயிகளும், அந்த பகுதி பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.