ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எச்சரிக்கை


ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 21 Oct 2018 4:30 AM IST (Updated: 21 Oct 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரூர்,

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பொதுமக்கள் பலர் தங்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.

இதனால் மக்கள் நலன் கருதி 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மட்டுமல்லாது திருச்சி, கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் மக்களுக்கு அடிக்கடி பஸ்கள் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவற்றை தவிர்க்கும் வகையில், போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள், தொழிற்சங்கத்தினர் ஆகியோர் அடங்கிய குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

பண்டிகை கால பயணத்தை மக்கள் சிரமமின்றி மேற்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஆம்னி பஸ்களில் ஒரே மாதிரியான கட்டணம் வசூலிப்பது குறித்து அந்த சங்கத்தினருக்கு தெரிவித்து உள்ளோம். இதையும் மீறி சிலர் கூடுதல் கட்டணம் வசூலித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு பஸ்களில் இதுபோன்ற செயல்கள் நடக்க வாய்ப்பில்லை. கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து உரிய ஆதாரத்துடன் புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story