சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் தெரிவித்தும் கவர்னர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? அன்பழகன் எம்.எல்.ஏ. கேள்வி


சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் தெரிவித்தும் கவர்னர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? அன்பழகன் எம்.எல்.ஏ. கேள்வி
x
தினத்தந்தி 21 Oct 2018 5:00 AM IST (Updated: 21 Oct 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் தெரிவித்த நிலையில் கவர்னர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கேள்வி விடுத்தார்.

புதுச்சேரி,

புதுச்சேரி அ.தி.மு.க. சட்டமன்ற தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:–

பொதுப்பணித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தூர்வார நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கவர்னர் கிரண்பெடி கடந்த 15 ஆண்டுகளாக வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் உள்ளது என்று குற்றஞ்சாட்டுகிறார். ரூ.80 லட்சம் செலவில் ரூ.20 கோடி அளவிற்கான தூர்வாரும் பணியை மேற்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அரசு ஒவ்வொரு ஆண்டும் வாய்க்கால்களை தூர்வார பொதுப்பணித்துறைக்கு ஒதுக்கிய பணம் எங்கே செல்கிறது. இந்த குற்றச்சாட்டுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பதில் அளிக்க வேண்டும்.

ஒவ்வொரு தனியார் நிறுவனங்களில் இருந்தும் கவர்னர் பணம் வாங்குவதாக நாராயணசாமி புகார் கூறி வருகிறார். கவர்னரின் செயல்கள் குறித்து விவாதிக்க உடனடியாக சட்டசபையை கூட்ட வேண்டும். குறைந்தபட்சம் அமைச்சரவையை கூட்டி கவர்னரின் செயல்குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த தீர்மானம் நிறைவேற்றி அதனை எடுத்து சென்று மத்திய உள்துறை அமைச்சகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

அரசு விழாவில் எம்.எல்.ஏ.வாகிய நான் கவர்னரால் அவமதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டேன். இது குறித்து உரிமை மீறல் குழு நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் புகார் அளித்தேன். எம்.எல்.ஏ.வின் எந்த புகாரின் மீதும் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் நான் புகார் அளித்து 17 நாட்கள் ஆகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்காவிட்டால் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தின் அனுமதி பெற்று பெரிய அளவில் போராட்டம் நடத்துவேன். அ.தி.மு.க.வை அவமதிப்பதில் புதுவை மாநில காங்கிரஸ் அரசும், கவர்னரும் இணைந்து செயல்படுகின்றனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு தொகுதி எம்.எல்.ஏ., துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் யாருக்கும் தெரிவிக்காமல் கவர்னர் கிரண்பெடி சட்ட கல்லூரிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்கள் கவர்னரை கல்லூரிக்கு உள்ளேயே வைத்து கதவை இழுத்து மூடி போராட்டம் நடத்தினர். ஆனால் அதனை மறுத்த கவர்னர் அதை பொய் என்ற நிரூபிக்க அந்த மாணவர்களை கவர்னர் மாளிகைக்கு அழைத்து கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டார்.

கடந்த ஆண்டு பாப்ஸ்கோ சார்பில் நடத்தப்பட்ட தீபாவளி சிறப்பு அங்காடிக்கு வாங்கிய பொருட்களுக்கு இன்னும் பணம் தராததால் அந்த நிறுவனங்கள் இந்த ஆண்டு பொருட்களை வழங்க முன்வரவில்லை. இதனால் தீபாவளி சிறப்பு அங்காடி நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே தீபாவளி சிறப்பு அங்காடி உண்டா? இல்லையா என்பதை அரசு அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story