தவறான செய்தியை நாட்டு மக்களுக்கு சொல்லிக்கொண்டிருக்கிறார்: ‘மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு லாயக்கில்லை’ எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு


தவறான செய்தியை நாட்டு மக்களுக்கு சொல்லிக்கொண்டிருக்கிறார்: ‘மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு லாயக்கில்லை’ எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு
x
தினத்தந்தி 21 Oct 2018 4:45 AM IST (Updated: 21 Oct 2018 2:23 AM IST)
t-max-icont-min-icon

மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு லாயக்கில்லை என்றும், தவறான செய்தியை நாட்டு மக்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தமிழகத்தில் இருந்த முதல்-அமைச்சர்களில் யார் மீதும் சி.பி.ஐ. விசாரணை நடந்ததில்லை, ஆனால் இப்பொழுது உங்கள் மீது தான் சி.பி.ஐ. விசாரணை நடக்கப்போகிறது என்று மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு கூறியிருக்கிறாரே?.

பதில்:- அவர் பொய்யாய் சொல்லிக் கொண்டிருக்கிறார். எந்த குற்றச்சாட்டு என்று சொன்னால் பரவாயில்லை. இவர் எல்லா ஆயுதத்தையும் எடுத்துப் பார்த்தார். ஆட்சியை கலைக்கலாம் என்ற ஆயுதத்தை எடுத்தார். சட்டமன்றத்தில் கடுமையான அராஜகம் செய்தார். அதுமட்டுமல்ல, புனிதமாக மதிக்கக்கூடிய சட்டமன்றத்தில் சபாநாயகர் இருக்கையிலேயே, அவருடைய கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் அமர்ந்தார்கள். அதற்குப் பிறகு, கட்சியை உடைக்கலாம் என்று நினைத்தார்கள், சிலபேரை தூண்டிவிட்டு எங்கள் கட்சிக்குள்ளேயே ஒரு பிரிவினையை உருவாக்கப் பார்த்தார்கள், அதுவும் முடியவில்லை. இப்பொழுது இந்த ஆயுதத்தை எடுத்திருக்கிறார்கள். டெண்டர் விடுவதில் என்ன தவறு இருக்கிறது என்றுதான் நான் கேட்கிறேன்.

ஒட்டன்சத்திரம், தாராபுரம், அவினாசி சாலை டெண்டர்களை என் உறவினருக்கு கொடுத்ததாக குற்றச்சாட்டு. உறவினர் என்று சொன்னால், 1968-ம் ஆண்டு தி.மு.க.வில் தலைவராக இருந்து, முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி காலத்திலேயே ஒரு வரைமுறை வகுக்கப்பட்டிருக்கின்றது. யார் யாரெல்லாம் ரத்தம் சம்பந்தப்பட்ட உறவுகள் என்று. அப்பா, அம்மா, அந்த துறையினுடைய அமைச்சர், அவருடைய மனைவி, மகன், மகள், அண்ணன், தம்பி, இப்படித்தான் ரத்த உறவு. நெருங்கிய உறவினர்கள் என்று பார்த்தால், அப்பா, அம்மா, அந்த துறையினுடைய அமைச்சர், அவருடைய மனைவி, மகன், மகள், மகளுடைய கணவர், மகனுடைய மனைவி, அந்த அமைச்சரின் மனைவியுடைய அப்பா, அம்மா, அப்பாவிற்கு இரண்டாம் தாரம் இருந்தால், அவருடைய மனைவி, அவருடைய மகன், மகள், அவர் யாரையாவது தத்தெடுத்து வளர்த்திருந்தால் அந்த பையன், பெண். இவர்கள் தான் நெருங்கிய உறவினர்கள். இதில் எதிலும் வரவில்லை.

அப்படியிருக்கும்பொழுது, சொந்தக்காரருக்கு கொடுத்தேன் என்ற சொன்னால், எப்படி, ஆக ஒரு எதிர்க்கட்சித் தலைவருக்கே தகுதியில்லாமல் இருக்கிறார். ஒரு எதிர்க்கட்சித் தலைவர் இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் ஒரு தவறான செய்தியை நாட்டு மக்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார் என்றால், எதிர்க்கட்சித் தலைவர் அந்த பதவிக்கு லாயக்கில்லை என்றுதான் மக்கள் கருதுகிறார்கள், நானும் கருதுகிறேன்.

தி.மு.க. ஆட்சியில் முறைகேடு

தி.மு.க. ஆட்சி காலத்தில் 4 டெண்டர்கள் விட்டார்கள். இதையெல்லாம் கோப்புகள் எடுத்து பார்க்கும் போதும் தான் தெரிந்தது. ஆற்காடு - உளுந்தூர்பேட்டை - போளூர் - செங்கம் - விருத்தாசலம் - திருவாரூர் - ஜெயங்கொண்டம் - அரியலூர் மற்றும் புதிய புறவழிச்சாலை மற்றும் சிதம்பரம் - சீர்காழி - ஆரணி - போளூர் - திருவண்ணாமலை - திருக்கோவிலூர் - விருத்தாசலம் - அரியலூர் மற்றும் திருவாரூர் சாலைகளை மேம்படுத்துதல். இந்த டெண்டர் ஒப்பந்தம் விட்ட மதிப்பு ரூ.611.70 கோடி. இதில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். செய்யச் செய்ய கிட்டத்தட்ட ரூ.161.67 கோடி அதிகமாக கொடுக்கிறார்கள். அதாவது 26.43 சதவீதம் ஆகும். அதிகமாக பணம் கொடுத்திருக்கிறார்கள். இதற்கு எல்லாம் அவர் பதிலே சொல்லவில்லை.

2006-ல் ஒரு டெண்டர் விடுகிறார்கள். நாகப்பட்டினம் முதல் கட்டுமாவடி வரை உள்ள சாலையை மேம்படுத்துதல். இதிலே அசல் ஒப்பந்த மதிப்பு ரூ.198.77 கோடி. இதற்கு கூடுதலாக ரூ.72.49 கோடி கொடுக்கிறார்கள். வேலை செய்யச் செய்ய கொடுக்கிறார்கள். டெண்டரை விட கூடுதலாக போடவில்லை. இதற்கு 36.4 சதவீதம் அதிகமாக கொடுத்திருக்கிறார்கள்.


இரண்டாவது அசல் ஒப்பந்தம் ரூ.143.41 கோடி. இதிலே கூடுதலாக கொடுத்தது ரூ.111.39 கோடி. எந்த விரிவாக்கத்திற்கும் இவ்வளவு விலை ஆகாது. 2006-ல் இருந்து 2008 வரைக்கும் எவ்வளவு விலை உயரப் போகுது. ரூ.143.41 கோடியில் ராமநாதபுரம் முதல் கட்டுமாவடி வரை உள்ள சாலைகளை மேம்படுத்துதல். இதிலே 77.67 சதவீதம் அதிகமாக கொடுத்திருக்கிறார்கள்.

அதேபோல, 2007, 2008 மற்றும் 2009 வரைக்கும், 3 வருடங்கள் செய்திருக்கிறார்கள். ராமநாதபுரம் முதல் தூத்துக்குடி வரை உள்ள சாலைகளை மேம்படுத்துதல். இந்த ஒப்பந்த மதிப்பு ரூ.119.26 கோடி. இதற்கு கூடுதலாக வழங்கப்பட்ட தொகை ரூ.84.72 கோடி. இதிலே உள்ள அதிக மதிப்பீடு 71.04 சதவீதம். இது எல்லாம் முந்தைய டெண்டர்.


நாங்கள் விட்டது ஆன்-லைன் டெண்டர். பணம் கட்டுவது கூட யாருக்கும் தெரியாது. இதுதான் முதல்முறை தமிழ்நாட்டில் ஆன்-லைனில் பணம் கட்டுவது. அப்போது டெண்டர் போடுவது தான் தெரியும். ஆக ரகசிய குறியீட்டு எண்ணில் என்றைக்கு திறக்கிறார்களோ, அன்றைக்கும் தான் யார் டெண்டர் போட்டார்கள், எந்த விலையில் போட்டார்கள் என்பது முழுவதுமாக தெரியும். அதில் எப்படி முறைகேடு நடக்கும்.

ஆக, வேண்டும் என்றே, அரசின் மீது உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக, விரக்தியின் விளிம்பில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போய்விட்டார். அவர் பல ஆயுதத்தை தூக்கிப் பார்த்தார். எதுவும் நடக்கவில்லை. இந்த ஆயுதத்தை தூக்கி தான் இப்போது புறப்பட்டு இருக்கிறார். அதில் நிச்சயம் வெற்றிகாண முடியாது.

கேள்வி:- தி.மு.க. ஆட்சியிலே நிறைய முறைகேடுகள் நடந்திருக்கிறதாக சொல்லி இருக்கிறீர்களே, அவர்கள் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில்:- இப்போது தான் தோண்ட தோண்ட வருகிறது. டி.என்.ஆர்.எஸ்.பி. டெண்டரில் இந்த மாதிரி தவறுகள் நடந்துவிட்டது என்று ஆர்.எஸ்.பாரதி கொண்டு போய் கொடுத்தார். நாங்கள் இதையெல்லாம் எடுத்து பார்க்கும் போது தான், இப்படி அவர்கள் போட்ட டெண்டர் தெரிகிறது. 76 சதவீதம் கூடுதலாக கொடுத்திருக்கிறார்கள்.

கேள்வி:- வழக்கு தொடர வாய்ப்பு இருக்கிறதா?.

பதில்:- அதையெல்லாம் சட்ட வல்லுநர்களோடு கலந்து ஆலோசித்து தான் சொல்ல முடியும். இவர்களை போல் உடனே போய் எழுதி கொடுத்து செய்ய முடியாது. ஆர்.எஸ்.பாரதி ஒரு வக்கீல். நாடாளுமன்ற உறுப்பினராகவும், சேர்மனாகவும் இருந்தவர். ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.2.2 கோடி செலவு பண்ண முடியுமா?. தி.மு.க. ஆட்சியிலே ரூ.8.3 கோடி செலவு செய்துவிட்டு, 10 வருடத்திற்கு முன்பே, இப்ப சொல்ல முடியுமா?. வருடாந்திர டெண்டர் 2009-ல் வண்டலூரில் இருந்து நெமிலிச்சேரி வரையிலும் ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.36.45 கோடிக்கு விட்டுவிட்டு இப்ப போய் சொல்கிறார். எதையும் படிப்பதில்லை. ஏதாவது ஒரு குற்றச்சாட்டு சொல்ல வேண்டும். எப்படியாவது முதல்-அமைச்சரை வந்து, தவறான விமர்சனம் செய்து மக்கள் மத்தியிலே ஒரு தவறான செய்தியை கொண்டு போக வேண்டும், அப்படி என்ற நிலை தானே தவிர உண்மை அல்ல என்பதை தெளிவுபடுத்தி கொள்கிறேன்.

இவ்வாறு பதில் அளித்தார்.

பின்னர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனி சாமி எடப்பாடி பயணியர் மாளிகையில், மாற்றுத் திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, அவர்க ளின் குறைகளை கேட்டறிந் தார்.

Next Story