100 அடி உயர மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி கலெக்டர் ஆய்வு


100 அடி உயர மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 21 Oct 2018 4:15 AM IST (Updated: 21 Oct 2018 2:36 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் 100 அடி உயரமுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி மாவட்ட கலெக்டர் அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார்.

கரூர்,

கரூர் மாவட்டம் முழுவதும் டெங்கு தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுமக்களுக்கு டெங்கு நோயை பரப்பும் கொசுக்கள் பற்றியும், எவ்வாறு நோய் பரவுகிறது குறித்தும், டெங்கு கொசுக்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது குறித்தும் பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கரூர் நகராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர், ஆசிரியர் காலனி பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு தடுப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் அன்பழகன் நேற்று வீடு வீடாக சென்று ஆய்வு செய்தார். பின்னர் இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:-

பொதுமக்கள் தங்கள் வீடுகளில் குடிநீரை மூடி வைத்து தூய்மையாக பயன்படுத்துகிறார்களா? என்று டெங்கு தடுப்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் ஆய்வுசெய்கின்றனர். நீர்த்தேக்க தொட்டிகளில் குளோரின் பவுடர் தெளித்தும், மருந்துகள் தெளித்தும் வருகின்றனர். நீரை முறையாக மூடி வைக்காமல் இருந்தாலோ, சுற்றுப்புறங்களில் நீர் தேங்கியிருந்தாலோ அதுகுறித்து போதிய விழிப்புணர்வு வழங்கி வருகின்றனர். ஏடிஸ் கொசு குறித்தும் அதன் வளர்ச்சி குறித்தும் பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.

வீட்டில் உள்ள நபர்களுக்கோ, குழந்தைகளுக்கோ காய்ச்சலுக்கான அறிகுறி இருப்பின் சுயவைத்தியம் மேற்கொள்ளாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று முறையாக மருத்துவரிடம் பரிசோதனை மேற்கொண்டு அவரின் அறிவுரைப்படி மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் கரூர் பஸ் நிலையத்தில் உள்ள 100 அடி உயரம் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி தொட்டி சுத்தமாக உள்ளதா?, மூடி உள்ளதா?, சரியான அளவு குளோரினேசன் செய்யப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர், பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை குறிப்பிட்ட நாளில் சுத்தம் செய்து சரியான அளவில் குளோரினேசன் செய்து வழங்கவேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது கரூர் நகராட்சி ஆணையர் செந்தில்முருகன், நகர் நல அதிகாரி ஆனந்தகுமார், வட்டாட்சியர் ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Next Story