வேலைக்கு செல்லும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு இருசக்கர வாகனம் 31-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
வேலைக்கு செல்லும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் பயன்பெற தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வருகிற 31-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் 2017-2018-ம் நிதியாண்டில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ், வேலைக்கு செல்லும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு இருசக்கர வாகனங்கள் அரசு மானியத்துடன் வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகம் மற்றும் மகளிர் திட்ட அலுவலகங்களில் இலவசமாக வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் தர்மபுரி மாவட்டத்தை பிறப்பிடமாக கொண்டு தமிழகத்தில் வசிப்பவராகவும், 18 வயது முதல் 40 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மிகாமல் இருப்பது அவசியம். ஒரு குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே இந்த திட்டத்தில் பயன்பெற முடியும். அரசு பணியில் காலமுறை ஊதியம் பெறுபவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்க இயலாது. 3 சக்கரங்கள் பொருத்தப்பட்ட வாகனம் பெறும் மாற்றுத்திறனாளிக்கு ஊரக வளர்ச்சித்துறையின் அரசாணைப்படி மானியத்தொகை ரூ.25 ஆயிரத்துடன் கூடுதல் மானியமாக 25 சதவீதம் உயர்த்தி மொத்தம் ரூ.31 ஆயிரத்து 250 வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்துடன் வயது வரம்பிற்கான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஓட்டுனர் உரிமத்தின் நகல், வேலை வழங்கும் நிறுவனத்தால் வழங்கப்பட்ட ஆண்டு வருமான சான்றிதழ், பணிபுரிவதற்கான அத்தாட்சி நகல் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் கார்டு, கல்வி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சாதி சான்றிதழ், மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை, இருசக்கர வாகனத்திற்கான விலைப்புள்ளி ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இணைத்து வருகிற 31-ந்தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது விரைவு மற்றும் பதிவு அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். இந்த திட்டத்தில் பயன்பெற தகுதியுடைய வேலைக்கு செல்லும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story