எட்டயபுரத்தில் பலத்த மழை வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது
எட்டயபுரத்தில் பெய்த பலத்த மழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு எட்டயபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தி கிராமத்தில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு, அங்கு உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் வீட்டில் இருந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த எட்டயபுரம் தாசில்தார் வதனாள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்.
பின்னர் தாசில்தார் உத்தரவின் பேரில், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பத்திரமாக, அங்கு உள்ள பள்ளி வளாகத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று காலையில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா மற்றும் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசினர். அப்போது காட்டாற்று வெள்ளம் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் நேரடியாக அயன்வடமலாபுரம் கண்மாய்க்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த வழியில் உள்ள வாறுகால்களை தூர்வார வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.
அதன் பின்னர் மழை தண்ணீர் வடிந்ததும், பள்ளிக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த பொதுமக்கள் பத்திரமாக தங்கள் வீடுகளுக்கு திரும்பினர்.
Related Tags :
Next Story