ஊத்துக்கோட்டை அருகே சுடுகாடு வழியாக லாரிகள் இயக்கப்படுவதை கண்டித்து பொதுமக்கள் மறியல்
ஊத்துக்கோட்டை அருகே சுடுகாடு வழியாக கிராவல் மண் ஏற்றிய லாரிகள் இயக்கப்படுவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊத்துக்கோட்டை,
ஊத்துக்கோட்டையில் ஆரணி ஆற்றின் குறுக்கே ரூ.28 கோடி செலவில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் தொடங்கி உள்ளதால் தற்போது ஆற்றின் தரைப்பாலம் வழியாக நடைபெற்று வரும் வாகன போக்குவரத்து ரத்து செய்யப்பட உள்ளது. இவ்வாறு போக்குவரத்து ரத்து செய்தால் வாகனங்கள் வந்து செல்ல ஏதுவாக தரைப்பாலத்தை ஒட்டி புதிதாக சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த சாலை பணியில் பயன்படுத்துவதற்காக ஊத்துக்கோட்டை அருகே உள்ள தொம்பரம்பேடு கிராம எல்லையில் கிராவல் மண் எடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இந்த கிராவல் மண் அள்ளுவதற்கு அனுமதி பெற்றவர்கள் தொம்பரம்பேடு கிராம எல்லையில் உள்ள சுடுகாட்டை அழித்து சாலை அமைத்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து கிராம மக்கள் நேற்று மதியம் ஊத்துக்கோட்டை– பெரியபாளையம் முக்கிய சாலை தொம்பரம்பேட்டில் மறியலில் ஈடுப்பட்டனர்.
தகவல் அறிந்த உடன் ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், இன்ஸ்பெக்டர் பாலு, சப்–இன்ஸ்பெக்டர் நித்தியானந்தம் ஆகியோர் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சுடுகாட்டில் உள்ள சமாதிகள் சேதம் அடையாத வகையில் கிராவல் லாரிகள் இயக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் விலக்கி கொள்ளப்பட்டது.
இதன் காரணமாக ஊத்துக்கோட்டை– பெரியபாளையம் இடையே ¾ மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள்.