குடிமங்கலம் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பஸ்
குடிமங்கலம் அருகே சாலையோர பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்தது.
குடிமங்கலம்,
குடிமங்கலத்தை அடுத்த ராமச்சந்திராபுரத்தில் இருந்து உடுமலைக்கு அரசு டவுன்பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 20–க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பஸ் ராமச்சந்திராபுரம்–உடுமலை சாலையில் பண்ணை கிணறு அருகே சென்றபோது எதிரே ஒரு கார் வந்து கொண்டிருந்தது. இந்த காருக்கு வழி விடுவதற்காக சாலையின் ஓரமாக பஸ்சை டிரைவர் ஓட்டினார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
மேலும் பஸ்சின் படிக்கட்டுபகுதி தரையில் அழுத்தியதால் பஸ்சுக்குள் இருந்தவர்கள் வெளியே முடியாமல் கூச்சல் போட்டனர். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடிச்சென்று பஸ்சுக்குள் இருந்தவர்களை ஜன்னல் வழியாக வெளியே மீட்டனர். காயம் அடைந்தவர்கள் உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பொதுமக்கள் கூறும்போது ‘‘ கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் தார்ரோடு போடப்பட்டது. ஆனால் ரோட்டின் ஓரங்களில் முறையாக மண்போட்டு நிரப்பவில்லை. அருகில் உள்ள மண்ணை எடுத்து நிரப்பி உள்ளனர். இதனால் வாகனங்கள் சாலையை விட்டு லேசான இறங்கினாலும் பள்ளத்தில் கவிழ்ந்து விடும். இதுபோல் பல விபத்துகள் நடந்துள்ளது. எனவே ரோட்டோரம் சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும்’’ என்றனர்.