நீர்பிடிப்பு பகுதியில் மழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
பவானிசாகர்,
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீராதாரமாக பவானிசாகர் அணை விளங்குகிறது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாகும்.
அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறந்து விடப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய பகுதிகளில் உள்ள 2 லட்சத்து 45 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும் பவானி ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீரால் 40 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 849 கனஅடி நீர் வந்துகொண்டு இருந்தது. அணையின் நீர்மட்டம் 101.99 அடியாக இருந்து வருகிறது. அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு வினாடிக்கு 500 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது.
நேற்று மாலை 4 மணி அளவில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 543 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு வினாடிக்கு 1000 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.