சுய தொழில் தொடங்க இளைஞர்களுக்கு கடன் உதவி கலெக்டர் தகவல்
சுயதொழில் தொடங்க, இளைஞர்களுக்கு மானியத்துடன் கடன் உதவி அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடலூர் மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் மூலமாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் தொடங்க ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்க வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்படும். இதற்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 முதல் 45 வயதுக்குள் உட்பட்டவர்கள் www.msmeonline.tn .gov.in/uyegp என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இதேப்போல் புதிய தொழில்முனைவோர் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை 25 சதவீத மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது.
மேலும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் உற்பத்தி தொழில் தொடங்க ரூ.25 லட்சம் வரையிலும், சேவை தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரையிலும் 15 முதல் 25 சதவீத மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது. இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் அலுவலகத்தை 04142-230116 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story