முழு தகுதி பெற்ற பள்ளி ஆசிரியர்களை உதவி பேராசிரியர்களாக நியமிக்க கோரி ஊர்வலம்


முழு தகுதி பெற்ற பள்ளி ஆசிரியர்களை உதவி பேராசிரியர்களாக நியமிக்க கோரி ஊர்வலம்
x
தினத்தந்தி 22 Oct 2018 4:15 AM IST (Updated: 22 Oct 2018 3:56 AM IST)
t-max-icont-min-icon

முழு தகுதி பெற்ற பள்ளி ஆசிரியர்களை உதவி பேராசிரியர்களாக நியமிக்க கோரி திருச்சியில் ஊர்வலம் நடைபெற்றது.

தமிழ்நாடு நெட், செட், பி.எச்டி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் நேற்று திருச்சியில் கோரிக்கை முழக்க ஊர்வலம் நடந்தது. திருச்சி வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானா அருகில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் ஜவகர் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் ராஜா பாபு, பொதுச்செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளி கல்வி துறையில் பணியாற்றும் ஆசிரியர்களில் நெட், செட் தேர்வில் தேர்ச்சி பெற்று முழு தகுதியுடன் இருப்பவர்களையும், முனைவர் பட்டம் பெற்றிருப்பவர்களையும் அரசு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியராக நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் கலெக்டர் அலுவலகத்தை அடைந்ததும் அவர்கள் கலைந்து சென்றனர்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

உதவி பேராசிரியர் பணி நியமனத்தில் கல்லூரி பணி அனுபவத்திற்கு 2 மதிப்பெண் வழங்குவது போல் முழு தகுதி பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கும் பள்ளிப்பணி அனுபவத்திற்கு ஆண்டுக்கு 2 மதிப்பெண் வழங்க வேண்டும். ஆந்திர மாநிலத்தில் நடைமுறையில் உள்ள இதனை பின்பற்றி தமிழக அரசு ஆணை வெளியிட வேண்டும். மாணவர்களின் நலன் கருதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் காலி பணியிடங்கள் அனைத்தையும் உடனடியாக நிரப்ப வேண்டும். உதவி பேராசிரியர்களாக பணியாற்றுவதற்கு தகுதி பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கூடுதலாக ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கத்தில் பங்கேற்க தற்செயல் விடுப்பு வழங்க வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Next Story