அரசூரில்: துணை போலீஸ் சூப்பிரண்டு சென்ற கார், நடுரோட்டில் கவிழ்ந்தது - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
அரசூரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சென்ற கார், நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
அரசூர்,
விழுப்புரம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக இருப்பவர் வீமராஜ். இவர் நேற்று மாலை விழுப்புரத்தில் இருந்து காரில் உளுந்தூர்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். காரை டிரைவர் சவுந்தரபாண்டியன் ஓட்டினார். இந்த கார் மாலை 5 மணியளவில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசூர் பாரதிநகர் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையின் குறுக்கே மாடு ஒன்று வந்தது. இதை பார்த்த டிரைவர் சவுந்தரபாண்டியன், மாடு மீது மோதாமல் இருப்பதற்காக, காரை ‘பிரேக்’ போட்டு நிறுத்தினார். இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் கண் இமைக்கும் நேரத்தில் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு வீமராஜ், டிரைவர் சவுந்தரபாண்டியன் ஆகியோர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story