மாற்றுத்திறனாளிக்கு 3 சக்கர சைக்கிள் தர மறுத்த அதிகாரிகள்


மாற்றுத்திறனாளிக்கு 3 சக்கர சைக்கிள் தர மறுத்த அதிகாரிகள்
x
தினத்தந்தி 23 Oct 2018 4:15 AM IST (Updated: 22 Oct 2018 7:56 PM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் அமீர்பாளையத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான செல்வராஜ் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தார்.

விருதுநகர்,

சாத்தூர் அமீர்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 30). மாற்றுத்திறனாளியான இவர் தீப்பெட்டி ஆலையில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு தனக்கு 3 சக்கர சைக்கிள் வழங்க கோரி மனு கொடுக்க வந்தார்.

 மனு கொடுத்துவிட்டு சென்று விட்ட அவரை செல்போனில் தொடர்பு கொண்ட அதிகாரிகள், உடனடியாக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து 3 சக்கர சைக்கிளை பெற்றுச் செல்லுமாறு தெரிவித்துள்ளனர். ஆனால் செல்வராஜ் தான் சாத்தூர் பஸ் நிலையம் வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து வேனில் சைக்கிளை கொண்டு வந்து தருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி வேனில் 3 சக்கர சைக்கிளை சாத்தூருக்கு கொண்டு சென்று செல்வராஜுக்கு தகவல் தெரிவித்தனர்.

 செல்வராஜும் ஒரு பழைய 3 சக்கர சைக்களில் அதிகாரிகளை சந்திக்க வந்தார். அப்போது அதிகாரிகள் செல்வராஜிடம் விசாரணை நடத்திய போது, 3 வருடங்களுக்கு முன்னர் கொடுக்கப்பட்ட 3 சக்கர சைக்கிள் தொலைந்து விட்டதாகவும், இந்த பழைய சைக்கிளை வேறு ஒரு நபர் கொடுத்து உதவியதாகவும் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் 5 வருடங்களுக்கு பின்னர் தான் புதிதாக 3 சக்கர சைக்கிள் கொடுக்க முடியும் என்ற கூறிவிட்டு அவர்கள் வேனில் கொண்டு சென்ற 3 சக்கர சைக்கிளை செல்வராஜுக்கு கொடுக்க மறுத்ததோடு, உரிய ஆவணங்களுடன் கலெக்டர் அலுவலகம் வருமாறு தெரிவித்துவிட்டு திரும்பி விட்டனர். மாற்றுத்திறனாளி செல்வராஜும் என்ன செய்வது என்று தெரியாமல் தான் வந்த பழைய சைக்களிலேயே திரும்பி சென்றார்.

 சாத்தூரிலேயே உரிய ஆவணங்களை பெற்றுக்கொண்டு 3 சக்கர சைக்கிளை அவருக்கு வழங்கி இருக்கலாம் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.


Next Story