திருச்சியில் ஆட்டோ டிரைவர் கொலை: அரியலூர் கோர்ட்டில் 4 பேர் சரண் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு


திருச்சியில் ஆட்டோ டிரைவர் கொலை: அரியலூர் கோர்ட்டில் 4 பேர் சரண் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
x
தினத்தந்தி 23 Oct 2018 4:30 AM IST (Updated: 23 Oct 2018 12:25 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் ஆட்டோ டிரைவர் கொலையில் தேடப்பட்ட 4 பேர், நேற்று அரியலூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

திருச்சி,

திருச்சி உறையூர் பணிக்கன் தெருவை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 45). ஆட்டோ டிரைவரான இவர், ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் தீபாவளி சீட்டும் நடத்தி வந்தார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக துரைராஜ் ‘ஓலோ’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்தார்.

கடந்த 18-ந் தேதி (ஆயுத பூஜையன்று) ஆட்டோவுடன் வெளியே சென்ற துரைராஜ், மறுநாள்(19-ந் தேதி) உறையூர் ராமலிங்கநகர் விரிவாக்கம் கார்மல் கார்டன் பகுதியில் ஒரு வீட்டின் அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார். அதாவது, அவரது ஆட்டோவிலேயே கடத்தி சென்ற மர்ம ஆசாமிகள், அவரை கத்தியால் குத்திக்கொன்று உடலை நைலான் சாக்குப்பையில் மூட்டையாக கட்டி, ஆட்டோவிலேயே போட்டு சென்றனர். இந்த கொலை குறித்து உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கோபிநாத், தயாளன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில், கொலை நடந்த 18-ந் தேதியில் இருந்து உறையூர் பகுதியை சேர்ந்த துரைராஜின் நண்பரான அப்பு என்கிற சரவணன் மாயமானது தெரியவந்தது. துரைராஜூம், சரவணனும் தீபாவளி சீட்டு நடத்தியதும், அந்த பணத்தை சரவணன் கையாடல் செய்து விட்டதும் தெரியவந்தது. சீட்டு போட்டவர்கள் துரைராஜை சந்தித்து நெருக்கடி கொடுக்கவே, சரவணனுடன் அவர் தகராறில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து சரவணின் செல்போன் எண் மூலம், அவர் எங்கு இருக்கிறார் என தேடும் பணியை தொடங்கினர்.

இந்தநிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த உறையூர் பகுதியை சேர்ந்த அப்பு என்கிற சரவணன்(37), ஸ்ரீரங்கம் தாலுகா போதூர் பகுதியை சேர்ந்த தனபால்(33), திருவெறும்பூரை சேர்ந்த சுரேஷ்(34) மற்றும் உறையூர் பாண்டமங்கலத்தை சேர்ந்த சதீஷ்(26) ஆகிய 4 பேர் நேற்று அரியலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதையடுத்து 4 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி மகாலட்சுமி உத்தரவிட்டார். பின்னர் 4 பேரும் பலத்த பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோர்ட்டில் சரண் அடைந்த 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி உறையூர் போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்காக திருச்சி 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) மனு செய்ய இருக்கிறார்கள். கொலையாளிகளை காவலில் எடுத்து விசாரித்த பின்னரே கொலைக்கான முழு விவரமும் மற்றும் கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்குமா? என்பதும் தெரியவரும் என உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் தெரிவித்தார்.

Next Story