ஆலங்குளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து முதியவர் பலி 30 பயணிகள் காயம்
ஆலங்குளத்தில் அரசு பஸ் கவிழ்ந்த விபத்தில் முதியவர் பலியானார். 30-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர்.
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று காலை 7 மணி அளவில் தென்காசிக்கு ‘ஒன் டூ ஒன்‘ அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சில் 80-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். தென்காசி அருகே உள்ள சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்த டிரைவர் விசாக கணேசன் பஸ்சை ஓட்டிச் சென்றார். பஸ் நெல்லையை கடந்ததும் அதிக வேகத்தில் சென்றது. இதனால் அச்சம் அடைந்த பயணிகள் இதுபற்றி டிரைவர், கண்டக்டரிடம் கூறியும் பஸ்சின் வேகம் குறையவில்லை.
7.45 மணி அளவில் ஆலங்குளம் நல்லூர் விலக்கு அருகே வந்தபோது, முன்னால் தனியார் பள்ளிக்கூட பஸ் சென்று கொண்டிருந்தது. அதனை அரசு பஸ் முந்திச் செல்ல முயன்றது. அப்போது பள்ளிக்கூட பஸ் திடீரென பிரேக் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதன் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் விசாக கணேசன் அரசு பஸ்சை இடதுபுறமாக திருப்பினார். இதில் பஸ் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் பாய்ந்து தலைகுப்புற கவிழ்ந்தது.
இதனால் பஸ்சுக்குள் இருந்த பயணிகள் அபயக்குரல் எழுப்பினார்கள். அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுபற்றி ஆலங்குளம் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட் டது. போலீசாரும், தீயணைப்பு படை வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பொதுமக்களும் அவர் களுடன் சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டார்கள்.
பஸ்சின் ஜன்னல் பகுதி வழியாக ஒவ்வொருவராக மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது. பலர் காயம் அடைந்தனர். அனைவரையும் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தென்காசி மற்றும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்தில் பலியான முதியவரின் உடலையும் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த விபத்து தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், விபத்தில் பலியான முதியவர், தென்காசி அருகே உள்ள சிவராமபேட்டையை சேர்ந்த ஈஸ்வரன் பிள்ளை (வயது 80) என்பது தெரியவந்தது. இவர் தாமிரபரணி புஷ்கர விழாவுக்காக தனது மனைவி கோமதி அம்மாளுடன் (58) நெல்லை கொண்டாநகரத்தில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று தங்கியிருந்தார். காருகுறிச்சி பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குடும்பத்தினருடன் புனித நீராடிவிட்டு நேற்று காலை கணவன்-மனைவி இருவரும் ஊருக்கு புறப்பட்டுச் சென்ற போது விபத்தில் சிக்கி ஈஸ்வரன் பிள்ளை பரிதாபமாக இறந்தது தெரியவந்தது.
இந்த விபத்தில் செங்கோட்டையை சேர்ந்த முகம்மது அலி மனைவி தாஜ்நிஷா (45), குற்றாலம் அருகே நன்னகரத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் ராமசுப்பிரமணியன் (35), நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த ஹைதர் அலி ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
மற்றவர்கள் லேசான காயம் அடைந்தனர்.
அவர்களின் விவரம் வருமாறு:-
விபத்தில் பலியான ஈஸ்வரன் பிள்ளை மனைவி கோமதி அம்மாள் (58), திசையன்விளையை சேர்ந்த பழனிவேல் (17) மற்றும் அருள் சிகாமணி (41), தாஜ்தீன் (41), பவித்ரா (2½), செலினா (11), அருணாசலம் (50), ஜெயராம் (23), இந்திரா பாய் (51), ராமநாதன் (41), ராஜேஷ் (7), நெல்லையை சேர்ந்த செல்வி, சுரேந்தர் (7), கலைச்செல்வி (31), தர்ஷினி (7), ரெஜினா (39), அரிஷ்கா (35), காசிதர்மத்தை சேர்ந்த கிருஷ்ணம்மாள் (55), மகாராஜா (18) மற்றும் பஸ் டிரைவர் விசாக கணேசன், கண்டக்டர் கபாலி ஆகியோர் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் பூங்கோதை எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். பின்னர் ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று, அங்கு சிகிச்சை பெற்றவர்களை பார்த்து ஆறுதல் கூறினார்.
Related Tags :
Next Story