ராமேசுவரம் அருகே கடற்கரையில் சிக்கிய ஆயுதங்கள் அமெரிக்கா–ரஷியாவில் தயாரானவை
ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் கடற்கரையில் சிக்கிய ஆயுத குவியல் அமெரிக்கா, ரஷியாவில் தயாரிக்கப்பட்டவை என்ற அதிர்ச்சி தகவல் வெடிபொருள் நிபுணர்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது.
ராமநாதபுரம்,
ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் கடந்த ஜூன் மாதம் அந்தோணியார்புரம் கடற்கரை பகுதியில் எடிசன் என்பவரின் வீட்டில் கழிவுநீர் தொட்டி அமைப்பதற்காக குழி தோண்டப்பட்டது. அப்போது அந்த குழிக்குள் பெட்டிபெட்டியாக ஆயுத குவியல் இருந்தது. வெடிகுண்டுகள், கண்ணிவெடி, தோட்டாக்கள், ராக்கெட் லாஞ்சர் குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் ஏராளமாக இருந்தன.
இந்த ஆயுதக்குவியல்களை போலீசார் தரம்பிரித்தனர். இதில் தோட்டாக்களை கோர்ட்டு உத்தரவின்படி ராமநாதபுரம் ஆயுதப்படை அலுவலகத்திலும், வெடிபொருட்களை சிவகங்கையில் உள்ள ஆயுதக்கிடங்கிலும் பத்திரமாக வைத்தனர்.
பயங்கர சக்தி வாய்ந்த இந்த வெடிபொருட்களை வெளிநாட்டில் இருந்து கடத்தி வந்து இலங்கைக்கு கொண்டு செல்வதற்காக புதைத்து வைத்திருக்கலாம் என்று கருதப்பட்டதால் எந்த நாட்டை சேர்ந்தது என்பதை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாடு கமாண்டோ படை வெடிபொருள் பிரிவு அதிகாரி, கடந்த ஆகஸ்டு மாதம் நேரில் வந்து ராமநாதபுரம் ஆயுதப்படை அலுவலகத்தில் வைக்கப்பட்ட தோட்டாக்களை ஆய்வு செய்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெடிபொருள் பிரிவு கமாண்டன்ட் சிவகங்கை ஆயுதகிடங்கிற்கு வந்து அங்கிருந்த வெடிபொருட்களை ஆய்வு செய்தார்.
அவர்கள் ஆய்வின்படி ராமநாதபுரத்தில் வைத்துள்ள தோட்டாக்கள் அமெரிக்கா, யுகோஸ்லோவியாவில் தயாரிக்கப்பட்டவை என்றும், வெடிபொருட்கள் ஆலந்து, ரஷியாவில் தயாரிக்கப்பட்டவை என்றும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக விரிவான அறிக்கை போலீசாருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேற்கண்ட தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் சுமார் 40 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பதாலும் அதன் வீரியம் முழுமையாக குறைந்துவிட்டதால் எங்கும் பயன்படுத்த முடியாது என்பதாலும் அவற்றை அழிக்க பரிந்துரை செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இந்த அறிக்கையை கோர்ட்டில் சமர்ப்பித்து வெடிபொருட்களையும், தோட்டாக்களையும் அழிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சிவகங்கை அருகே மேலூர் செல்லும் வழியில் உள்ள பாதுகாப்பான இடத்தில் இவற்றை அழிக்க உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சில மாதங்களுக்குமுன் தங்கச்சிமடம் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஆயுதக்குவியல் அமெரிக்கா, ரஷியாவில் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டவை என்ற தகவல் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.