‘சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைய போராடுவோம்’-கோவை கோர்ட்டு வளாகத்தில் மாவோயிஸ்டுகள் கோஷம்
‘சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைய போராடுவோம்’ என்று கோவை கோர்ட்டு வளாகத்தில் மாவோயிஸ்டுகள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை,
கோவை கருமத்தம்பட்டியில் கடந்த 2015-ம் ஆண்டு மாவோயிஸ்டு இயக்க தலைவர் ரூபேஸ், அவருடைய மனைவி ஷைனா கூட்டாளிகள் கண்ணன், அனூப், வீரமணி ஆகியோரை கியூபிரிவு போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடந்து வருகிறது. ரூபேஸ் மற்றொரு வழக்கு விசாரணைக்காக திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ஷைனா கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
நேற்று கோவை கோர்ட்டில் மாவோயிஸ்டுகள் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது. திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாவோயிஸ்டு தலைவர் ரூபேசை கேரள போலீசார் பலத்த பாதுகாப்புடன் கோவை கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். அதேபோல் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள கண்ணன், அனூப், வீரமணி ஆகியோரையும் போலீசார் கோவை கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். ஷைனாவும் கோர்ட்டுக்கு வந்து இருந்தார்.
கோர்ட்டு வளாகத்தில் மாவோயிஸ்டுகள் கண்ணன், அனூப், வீரமணி ஆகியோர் திடீரென கோஷம் எழுப்பினர். ‘ஜிந்தாபாத், ஜிந்தாபாத், மாவோயிஸ்டுகள் ஜிந்தாபாத். அடக்குமுறைக்கு அடங்கமாட்டோம். மாவோயிஸ்டுகள் தேசபக்தர்கள்’ என்று கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நீதிபதி சக்திவேல் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி அடுத்த மாதம் 13-ந்தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தார். விசாரணைக்கு பின்னர் ரூபேஸ் திருச்சூர் சிறைக்கும், மற்றவர்கள் கோவை சிறைக்கும் அழைத்து செல்லப்பட்டனர்.
அப்போது மாவோயிஸ்டுகள் கண்ணன், அனூப், வீரமணி ஆகியோர் மீண்டும் கோஷம் எழுப்பினார்கள். ‘சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைய சம உரிமைக்காக போராடுவோம்’ என்று கோஷம் எழுப்பினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மாவோயிஸ்டுகள் வேனில் ஏற்றிச்செல்லப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story