முதல்-அமைச்சர் குறித்து துண்டுபிரசுரம் வினியோகம்: தி.மு.க.வை சேர்ந்த 6 பேர் கைது


முதல்-அமைச்சர் குறித்து துண்டுபிரசுரம் வினியோகம்: தி.மு.க.வை சேர்ந்த 6 பேர் கைது
x
தினத்தந்தி 22 Oct 2018 9:45 PM GMT (Updated: 22 Oct 2018 9:07 PM GMT)

முதல்-அமைச்சர் குறித்து துண்டு பிரசுரம் வினியோகம் செய்த தி.மு.க.வை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

போத்தனூர்,

கோவையை அடுத்த சுந்தராபுரம் பகுதியில் தி.மு.க.வை சேர்ந்த குறிச்சி நகர முன்னாள்செயலாளர் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் நேற்று முன்தினம் மாலையில் பொது மக்களிடம் துண்டுபிரசுரம் வழங்கினார்கள். அதில் தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் ஊழல் செய்ததாகவும், அந்த ஊழல் குறித்தும் விரிவாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த துண்டு பிரசுரம் வினியோகிக்க போலீசாரிடம் அவர்கள் முறையாக அனுமதி பெறவில்லை. இது குறித்து தகவல் அறிந்த போத்தனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தி.மு.க. நிர்வாகிகளிடம், அனுமதி இல்லாமல் துண்டுபிரசுரம் வினியோகம் செய்யக்கூடாது என்றும், மீறி வினியோகம் செய்தால் கைது செய்வோம் என்றும் தெரிவித்தனர்.

எனினும் அவர்கள் போலீசார் கூறியதையும் மீறி அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் துண்டுபிரசுரங்களை வினியோகம் செய்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்ய முயன்றனர். இதை கண்டித்து தி.மு.க. நிர்வாகிகள் அங்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மறியலில் ஈடுபட்ட குறிச்சி பிரபாகரன், வட்ட செயலாளர்கள் கண்ணாமணி, முரளிதரன், மகாலிங்கம், கிருஷ்ணமூர்த்தி, நிஷார் அகமது ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்துச்சென்றனர். அவர்கள் மீது அனுமதி இல்லாமல் ஒரு இடத்தில் கூடுதல், அரசை விமர்சித்து துண்டுபிரசுரம் வினியோகித்தல் உள்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் 6 பேரும் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் போலீஸ் நிலைய பிணையில் (ஸ்டேசன் பெயில்) விடுதலை செய்யப்பட்டனர். 

Next Story