கடை ஓடுகளை பிரித்து ரூ.2¼ லட்சம் திருட்டு: 3 சிறுவர்கள் சிக்கினர்
திண்டுக்கல்லில் மளிகை கடையின் ஓடுகளை பிரித்து ரூ.2¼ லட்சத்தை திருடி சென்ற 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் நாகல்நகர் சந்தை பகுதியை சேர்ந்தவர் வெங்கிடுசாமி. இவர் சந்தை ரோட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில், கடந்த 12-ந்தேதி இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை கடையை திறந்தபோது, கடையின் ஓடுகள் பிரிக்கப்பட்டு இருந்தன. உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் மற்றும் சிகரெட், மிட்டாய் பாக்கெட்டுகள் திருட்டு போயிருந்தன.
இதனால், அதிர்ச்சி அடைந்த வெங்கிடுசாமி திண்டுக்கல் நகர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணனிடம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். பணத்துடன், சிகரெட், மிட்டாய் பாக்கெட்டுகளும் காணாமல் போயிருந்ததால், சிறுவர்களே அவற்றை திருடி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தினர்.
அதன்பேரில், பள்ளிக்கு செல்லாமல் சுற்றி திரிந்த வேடபட்டியை சேர்ந்த 3 சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் தான் பணத்தை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர், 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர் களுக்கு முறையே 17, 16, 15 வயதே ஆவதால் திண்டுக்கல் இளஞ்சிறார் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர், 3 பேரையும் சேலம் இளஞ்சிறார் கூர்நோக்கு இல்லத்தில் போலீசார் அடைத்தனர்.
Related Tags :
Next Story