கணவரின் அஞ்சல் சேமிப்பு பணத்தை பெற்று தரக்கோரி கலெக்டர் காலில் விழுந்து கதறிய மூதாட்டி
கணவரின் அஞ்சல் சேமிப்பு பணத்தை பெற்று தரக்கோரி கலெக்டர் காலில் விழுந்து கதறிய மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கை குறித்த மனுக்களை கலெக்டரிடம் கொடுத்தனர். இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக் டர் ரோகிணி உத்தரவிட்டார். முன்னதாக கலெக்டர் அலுவலக கீழ்தளத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்றார். இதனிடையே கலெக்டர் அலுவலகத்துக்கு வெளியே சிலர் பொதுமக்களுக்கு மனுக்க ளை எழுதி கொடுக்கிறார்கள். அவர்கள் பொதுமக்களிடம் அதிகமாக பணம் கேட்பதாக கலெக்டரிடம் புகார் கூறப்பட்டது. இதனால் அவர் மனு எழுதி கொடுக்கும் நபர்களிடம், மனுக்களை எழுதி கொடுக்க எவ்வளவு பணம் வாங்குகிறீர்கள் என கேட்டதுடன், அதிகப்படியான தொகை வசூலிக்க வேண்டாம் என கூறினார்.
இந்த நிலையில் மனு கொடுக்க வந்த தாசநாயக்கன்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி லட்சுமி (வயது 60) என்பவர் திடீரென கலெக்டர் ரோகிணியின் காலில் விழுந்து கதறி அழுதார். இதையடுத்து மூதாட்டியிடம் என்ன பிரச்சினை என அவர் கேட்டார். அதற்கு மூதாட்டி கூறுகையில், எனது கணவர் சுந்தரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர் இறப்பதற்கு முன்பு அஞ்சல் அலுவலகத்தில் சுமார் ரூ.18 ஆயிரம் சேமிப்பு வைத்திருந்தார். இந்த பணத்தை கேட்டால் அலைக்கழிக்கிறார்கள். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மூதாட்டியிடம் கலெக்டர் ரோகிணி தெரிவித்தார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அதில், எங்களுக்கு குண்டுசெட்டி ஏரி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் 14 வீடுகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான கோப்புகள் கிடப்பில் உள்ளன. கலெக்டரின் உத்தரவு பெற்ற பிறகே வீடுகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
குகை நரிக்குறவர் காலனியை சேர்ந்த துர்கா என்பவர் கொடுத்துள்ள மனுவில், எனது கணவர் வெற்றிவேல் 14 வயது மதிக்கத்தக்க சிறுமியை திருமணம் செய்ய வெளியூர் அழைத்து சென்றுள்ளார்.
இளம் வயது திருமணம் செய்த கணவர் வெற்றிவேல் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அவர் எனக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story