கனரக வாகனங்களை மாற்று பாதையில் இயக்கக்கோரி தோவாளையில் தி.மு.க.வினர் சாலை மறியல்


கனரக வாகனங்களை மாற்று பாதையில் இயக்கக்கோரி தோவாளையில் தி.மு.க.வினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 24 Oct 2018 4:30 AM IST (Updated: 23 Oct 2018 8:23 PM IST)
t-max-icont-min-icon

கனரக வாகனங்களை மாற்று பாதையில் இயக்கக்கோரி தோவாளையில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆரல்வாய்மொழி,

நாகர்கோவில்–நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் தோவாளையில் புதிய பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

எனவே, நெல்லையில் இருந்து வரும் கனரக வாகனங்களை ஆரல்வாய்மொழியில் இருந்து செண்பகராமன்புதூர், வெள்ளமடம் வழியாக நாகர்கோவிலுக்கு இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தோவாளையில் தி.மு.க.வினர் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில், ஒன்றிய தி.மு.க. செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் கருணாநிதி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தாணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தின் போது அந்த வழியாக வந்த ஒரு கனரக வாகனம் சிறைபிடிக்கப்பட்டது. மேலும், கனரக வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்க வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். இதில் கட்சி நிர்வாகிகள் கோலப்பன், வேல்முருகன், செந்தில் கிருஷ்ணன் உள்பட  பலர் கலந்து கொண்டனர். போராட்டக்காரர்களிடம் ஆரல்வாய்மொழி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story