திண்டுக்கல்லில் அரசு பஸ் டிரைவர் தற்கொலை முயற்சி: பணிமனை வளாகத்தில் விஷம் குடித்ததால் பரபரப்பு


திண்டுக்கல்லில் அரசு பஸ் டிரைவர் தற்கொலை முயற்சி: பணிமனை வளாகத்தில் விஷம் குடித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 23 Oct 2018 9:45 PM GMT (Updated: 23 Oct 2018 5:58 PM GMT)

திண்டுக்கல்லில் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பணிமனை வளாகத்தில், டிரைவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திண்டுக்கல்,

வத்தலக்குண்டு காந்திநகரை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 32). இவர் திண்டுக்கல்லில், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். திண்டுக்கல்-சென்னை வழித்தடத்தில் பஸ் ஓட்டி வருகிறார். இந்த நிலையில் நேற்று திண்டுக்கல்-திருச்சி பைபாஸ் சாலையில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக பணிமனை அலுவலகத்துக்கு ராம்குமார் வந்தார்.

அங்கு திடீரென பணிமனை வளாகத்தில் வைத்து அவர் விஷம் குடித்தார். அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சக டிரைவர்கள், அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தாலுகா போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் கூறுகையில், கடந்த 19-ந்தேதி முதல் இன்று (நேற்று) வரை திண்டுக்கல்-சென்னை இடையே தொடர்ந்து பஸ்சை ஓட்டி இருக்கிறேன். எனக்கு கடந்த 21-ந்தேதி ஓய்வும், 22-ந்தேதி வாரவிடுப்பும் தரவில்லை. இந்த நிலையில் தற்போதும் ஓய்வு தராமல் தொடர்ந்து பணிக்கு வரும்படி வற்புறுத்தினர். இதனால் மனவேதனையில் தற்கொலைக்கு முயன்றேன், என்றார்.

இதுகுறித்து பணிமனை மேலாளர் சீனிவாசன் கூறுகையில், டிரைவர் ராம்குமார் 8 நாட்கள் விடுப்பு எடுத்த பின்னர் 19-ந்தேதி தான் பணிக்கு வந்தார். 21-ந்தேதி பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால், அவரை தொடர்ந்து பணிக்கு நியமித்தோம். இன்று (நேற்று) அவருக்கு ஓய்வு கொடுப்பதற்காக மாற்று டிரைவரை பணிக்கு நியமித்து இருக்கிறோம்.
எனவே, அவர் எதற்காக அந்த முடிவை எடுத்தார் என்று தெரியவில்லை, என்றார்.

திண்டுக்கல்லில் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பணிமனை வளாகத்தில் டிரைவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story