திருப்போரூரில் முன்விரோதத்தில் பீர்பாட்டிலால் தாக்குதல் 4 பேருக்கு வலைவீச்சு


திருப்போரூரில் முன்விரோதத்தில் பீர்பாட்டிலால் தாக்குதல் 4 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 23 Oct 2018 10:45 PM GMT (Updated: 23 Oct 2018 6:48 PM GMT)

திருப்போரூரில் முன்விரோதம் காரணமாக பீர்பாட்டிலால் தாக்கி ஒருவர் காயம் அடைந்தார். இதுதொடர்பாக போலீசார் 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

திருப்போரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த பண்டிதமேடு பாளையத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த விஸ்வநாதன் (வயது 55). சொந்தமாக டிராக்டர் வைத்து தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் பண்டிதமேடு பகுதியை சேர்ந்த அன்பு என்பவரின் மனைவி கவிதாமான்விழியின் வளைகாப்பு நிகழ்ச்சி திருப்போரூர் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் விஸ்வநாதன் கலந்துகொண்டார். விருந்தை முடித்து விட்டு கை கழுவ வந்தபோது பண்டிதமேடு பகுதியை சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் விஸ்வநாதனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

அதில் ஒருவர் பீர் பாட்டிலை உடைத்து சரமாரியாக விஸ்வநாதன் கழுத்து தலை உள்ளிட்ட பாகங்களில் தாக்கினார். இதில் விஸ்வநாதன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து மயங்கி கீழே விழுந்தார்.

அங்கிருந்தவர்கள் விஸ்வநாதனை மீட்டு அருகில் உள்ள திருப்போரூர் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி செய்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கழுத்தில் காயம் அதிகமாக இருப்பதால் அங்கிருந்து நேற்று மாலை சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் பண்டிதமேடு பகுதியை சேர்ந்த சங்கருக்கும், விஸ்வநாதனுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் சங்கர் முன்விரோதம் காரணமாக அண்ணாதுரை, தாஸ் உள்ளிட்ட 4 பேருடன் சேர்ந்து விஸ்வநாதனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

விஸ்வநாதன் கொடுத்த புகாரின் பேரில் திருப்போரூர் போலீசார் விசாரணை நடத்தி, அண்ணாதுரை உள்பட 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story