மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதியது: பாட்டி-பேரன் உள்பட 3 பேர் உடல் நசுங்கி பலி


மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதியது: பாட்டி-பேரன் உள்பட 3 பேர் உடல் நசுங்கி பலி
x
தினத்தந்தி 24 Oct 2018 3:45 AM IST (Updated: 24 Oct 2018 12:24 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே டேங்கர் லாரி மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற பாட்டி, பேரன் உள்பட 3 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள்.

சாலியமங்கலம்,

தஞ்சை மானம்புச்சாவடி சிவன் கோவில் புதுத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவருடைய மனைவி கலைவாணி(வயது 47). தஞ்சை புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த அறிவுடை நம்பி மகன் குலோத்துங்கன்(35). கலைவாணியின் அக்காவின் மகனான இவருக்கு திருமணமாகவில்லை.

தஞ்சை ராதாகிருஷ்ணன் 3-ம் தெரு பாலகுரு மகன் அபினேஷ்(7). கலைவாணியின் மகள் வழி பேரனான இவன், மாரியம்மன் கோவில் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

கலைவாணி தனது பேரன் அபினேஷ், குலோத்துங்கன் ஆகியோருடன் நேற்று சாலியமங்கலம் அருகே உள்ள பூண்டி கடைத்தெருவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை குலோத்துங்கன் ஓட்டினார். இவர்கள் அம்மாப்பேட்டையில் உறவினர் ஒருவரின் வீட்டு விசேஷத்துக்கு சென்று கொண்டிருந்ததாக தெரிகிறது.

அப்போது திருச்சியில் இருந்து வேதாரண்யம் நோக்கி சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் பின்னால் மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கலைவாணி உள்பட 3 பேரும் லாரிக்கு அடியில் சிக்கி கொண்டனர். இதில் 3 பேரும் லாரியின் சக்கரங்களில் மாட்டி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இந்த கோர விபத்தை தொடர்ந்து டேங்கர் லாரியை சுற்றி வளைத்த அப்பகுதி பொதுமக்கள், லாரியின் கண்ணாடியை உடைத்தனர். மேலும் லாரி டிரைவர் வேதாரண்யம் சர்வகட்டளை கிராமத்தை சேர்ந்த ராவுத்தர்சாமியை சரமாரியாக தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்தில் பாட்டி-பேரன் உள்பட 3 பேர் பலியான சம்பவம் தஞ்சை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story