திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் 600 பேருக்கு பட்டம் கவர்னர் வழங்கினார்


திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் 600 பேருக்கு பட்டம் கவர்னர் வழங்கினார்
x
தினத்தந்தி 24 Oct 2018 4:15 AM IST (Updated: 24 Oct 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த 600 மாணவ-மாணவிகளுக்கு, கவர்னர் பன்வாரிலால் புரோகித் பட்டம் வழங்கினார்.

திருச்சி,

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 35-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கி, 600 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களையும், 74 பேருக்கு தங்கப்பதக்கங்களையும் வழங்கினார். விழாவில் உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வாழ்த்தி பேசியதாவது:-

நாட்டில் உயர்கல்வியில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. தமிழகத்தில் தற்போது 58 பல்கலைக்கழகங்கள், 2 ஆயிரத்து 472 கல்லூரிகள் உள்ளன. கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 21 அரசு கலை அறிவியல் கல்லூரிகள், 16 அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரிகள், 4 அரசு பொறியியல் கல்லூரிகள், 24 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் என மொத்தம் 65 கல்லூரிகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. இதில் கடந்த 2017-2018-ம் ஆண்டில் மட்டும் 8 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 3 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.

புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டதன் விளைவாக உயர் கல்வி பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. உயர்கல்வியில் தற்போது நாட்டில் உள்ள 25.8 சதவீத மாணவர் சேர்க்கையை, வருகிற 2020-ல் 30 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் அதையும் தாண்டி, உலக சராசரியான 36 சதவீதத்தையும் தாண்டி தற்போது 48.6 சதவீதமாக உள்ளது.

பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவுபெற்ற கல்லூரிகளின் எண்ணிக்கை 150-ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கையிலான இணைவுபெற்ற கல்லூரிகளை கொண்ட ஒரு மிகப்பெரிய பல்கலைக்கழகமாக இப்பல்கலைக்கழகம் பெயர்பெற்றுள்ளது.

பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் 1,000 கிலோவாட் சூரிய மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு, 500 கிலோவாட் மின் உற்பத்தி பகுதி நிறைவுபெற்று பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மீதமுள்ள பணிகளும் நடைபெற உள்ளது. பட்டம் பெறும் மாணவ-மாணவிகளுக்கு சமுதாய பொறுப்பு உள்ளது. அதன் மூலம் உங்களது பங்கை நாட்டிற்கு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் புதுடெல்லி தேசிய தர நிர்ணய மதிப்பீட்டு குழுமத்தின் தலைவர் வீரேந்தர் சிங்சவுகான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசுகையில், “உயர்கல்வி என்பது தனிமனித வளர்ச்சிக்கும், சமுதாய பணிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் பெரும் உதவியாக உள்ளது. நாட்டில் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்திய உயர்கல்வி திட்டமானது உலக அளவில் 2-வது இடத்தில் உள்ளது. நாடு சுதந்திரம் பெறுகிற நேரத்தில் 20 பல்கலைக்கழகங்கள், 200 கல்லூரிகள் இருந்தன. ஆனால் தற்போது 900 பல்கலைக்கழகங்கள், 40 ஆயிரம் கல்லூரிகள் உள்ளன. 3½ கோடிக்கும் மேலான மாணவர்கள் உயர்கல்வி பெறுகின்றனர். தற்போது அதிக இளைஞர்களை கொண்டது இந்த தேசம். பல சவால்களை சமாளிக்க இளைய சமுதாயம் முன்வர வேண்டும். புதிய நவீன இந்தியாவை உருவாக்க வேண்டும்,“ என்றார்.

விழாவில் துணைவேந்தர் மணிசங்கர் வரவேற்று பேசினார். பல்கலைக்கழக பதிவாளர் கோபிநாத், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், அவர்களது பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேராசிரியர்களுக்கு முனைவர் பட்டமும் வழங்கப்பட்டது. பல்கலைக்கழக இணைவுபெற்ற கல்லூரிகளில் பயின்ற 79 ஆயிரத்து 887 பேருக்கு அந்தந்த கல்லூரிகளில் பட்டம் வழங்கப்படும் என பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

Next Story