சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்ற 15 பெண்கள் மீது வழக்கு பதிய வேண்டும் - இல.கணேசன் எம்.பி. வலியுறுத்தல்


சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்ற 15 பெண்கள் மீது வழக்கு பதிய வேண்டும் - இல.கணேசன் எம்.பி. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 24 Oct 2018 4:45 AM IST (Updated: 24 Oct 2018 12:58 AM IST)
t-max-icont-min-icon

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்ற 15 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று இல.கணேசன் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

கோவை,

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கேரளா மற்றும் தமிழகத்தில் இந்து அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சபரிமலையின் பாரம்பரியத்தை பாதுகாக்கக்கோரி பா.ஜனதா மகளிர் அணி சார்பில் கோவை சித்தாபுதூரில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. இதை பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் எம்.பி. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

வி.கே.கே.மேனன் ரோடு, பாரதியார் ரோடு வழியாக சென்று காந்திபுரம் அரசு விரைவு பஸ் நிலையத்தில் ஊர்வலம் முடிந்தது. ஊர்வலத்தில் பா.ஜனதாவை சேர்ந்த பெண்கள் பலர் கலந்து கொண்டு, அய்யப்பன் பஜனை பாடல்களை பாடியபடியும், சரண கோ‌ஷம் எழுப்பியபடியும் கோரிக்கைகள் அடங்கிய விளம்பர பதாகைகளை கையில் ஏந்தியபடியும் சென்றனர்.

இதில், மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், மாநகர் மாவட்ட தலைவர் சி.ஆர்.நந்தகுமார், மாநில செயலாளர் ஆர்.நந்தகுமார், மாவட்ட பொதுச்செயலாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் இல.கணேசன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:–

சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு காரணமாக இந்து அமைப்புகளை சேர்ந்த தாய்மார்கள் கொதித்து போய் இருக்கிறார்கள். இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது. கொதித்துப்போய் இருக்கும் தாய்மார்களுக்கு வடிகாலாக இருக்கவே இதுபோன்ற ஊர்வலங்கள் நடத்தப்படுகிறது.

மேலும் இந்த தீர்ப்பு சபரிமலையின் பாரம்பரியத்தை கவனத்தில் கொள்ளாமல் கூறப்பட்டு உள்ளது. எனவே அதை மறுசீராய்வு செய்ய வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டு உள்ளது. விரைவில் நல்ல தகவல் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்து இருக்கிறோம்.

சபரிமலைக்கு இதுவரை 15 பெண்கள் சென்று உள்ளனர். அவர்களில் பலர் வேற்று மதத்தை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் அய்யப்பன் மீது பக்தி இல்லாதவர்கள். இவர்கள் அங்கு சென்று, குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்றும், கலவரத்தை தூண்ட வேண்டும் என்றும், மதபிரச்சினையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் சென்று உள்ளனர்.

அந்த 15 பெண்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உள்ளது. எனினும் காலதாமதம் செய்யாமல் அவர்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள முதல்வர் பினராயி விஜயன் அழுத்தம் கொடுத்ததால்தான் சபரிமலையில் பாதுகாப்பு அதிகரிக் கப்பட்டது என்று அந்த மாநில போலீஸ் அதிகாரி தெரிவித்து உள்ளார். மேலும் அவர், அய்யப்பன் சன்னதிக்கு சென்று மன்னிப்பும் கேட்டு உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story