வரியை உயர்த்தினால் பொதுமக்களை திரட்டி போராட்டம்; கமின‌ஷரிடம், தி.மு.க.வினர் மனு


வரியை உயர்த்தினால் பொதுமக்களை திரட்டி போராட்டம்; கமின‌ஷரிடம், தி.மு.க.வினர் மனு
x
தினத்தந்தி 23 Oct 2018 11:00 PM GMT (Updated: 23 Oct 2018 7:28 PM GMT)

வரியை உயர்த்தினால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று நகராட்சி கமி‌ஷனர் கண்ணனிடம், தி.மு.க.வினர் மனு கொடுத்தனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி ஜோதி நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் வரி உயர்வு வேண்டாம் என்பது குறித்த துண்டு பிரசுரங்களை கையில் ஏந்தி எதிர்ப்பை தெரிவித்தனர். அதை தொடர்ந்து அவர்கள் நகராட்சி கமி‌ஷனர் கண்ணனிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

தமிழகத்தில் வேறு எந்த நகராட்சியிலும் இல்லாத அளவிற்கு கடந்த 20 ஆண்டுகளாக அதிகபட்ச வரி விதிப்பால் பாதிக்கப்பட்டு உள்ளோம். வரிச்சுமையுடன் இருக்கும் பொள்ளாச்சி மக்கள் மீது மீண்டும் பொது வரி சீராய்வு 2018–ன் படி வரி உயர்வு செய்யப்பட்டால் பொதுமக்களின் பொருளாதார சுமை மேலும் அதிகமாகும். 2048–ம் ஆண்டு வசூலிக்கப்பட வேண்டிய வரி விதிப்பை 1998–ம் ஆண்டு முதல் பொள்ளாச்சி நகராட்சி தற்போது வரியாக வசூலித்து வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே குப்பை வரி விதிக்கப்பட்டு, எதிர்காலத்தில் பாதாள சாக்கடைக்கும் வரி விதிக்கப்பட கூடிய சூழ்நிலையில் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. எனவே வரி உயர்வை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பொள்ளாச்சி நகர தி.மு.க. செயலாளர் டாக்டர் வரதராஜன் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

பொள்ளாச்சி நகராட்சியில் வீதிகளை ஏ, பி, சி என பிரித்து, அதற்கு ஏற்ப வீட்டுமனை வரி விதிப்பு கடுமையாக உயர்த்தப்பட்டு உள்ளது. தற்போது சி பிரிவில் உள்ள வீதிகளை ஏ பிரிவுக்கு மாற்றி உள்ளீர்கள். அதன்படி சி பிரிவில் ஒரு சதுர அடிக்கு கட்டணம் ரூ.1.80 காசு என்பது ரூ.4.20 என அளவுக்கு 100 சதவீதத்தை விட அதிகமாக உயர்த்தப்பட்டு உள்ளது. அதே போல் பி பிரிவில் இருந்து ஏ பிரிவுக்கு சில வீதிகள் மாற்றப்பட்டு உள்ளது. இதனால் ஒரு சதுர அடிக்கு ரூ.2.30 என்ற அளவுக்கு 100 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. பொள்ளாச்சி நகரில் மாற்றம் செய்யப்பட்டு உள்ள வீதிகள் பெரும்பாலும் குடியிருப்புகள் ஆகும்.

இங்கு வசிக்கும் மக்கள் நடுத்தர வருவாய் குடும்பத்தை சேர்ந்தவர்கள். இந்த வரி உயர்வு பொதுமக்களை கண்டிப்பாக பாதிக்கும். பொள்ளாச்சி நகராட்சியில் உள்ள வரி விதிப்பு கோவை மற்றும் நெல்லை மாநகராட்சிகளில் கூட இல்லாத அளவிற்கு மிகவும் அதிகமாக உள்ளது. ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்திலேயே பொள்ளாச்சி நகரில் தான் கிட்டதட்ட 300 சதவீதம் அளவுக்கு வரிஉயர்த்தப்பட்டது. தற்போது எல்லா துறைகளிலும் தொழில்துறை முக்கியமாக நசிந்து உள்ளதால் வியாபாரிகள் உள்பட பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். வரி உயர்வை தடுத்து நிறுத்தாவிட்டால் பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் ஒன்று சேர்ந்து கவன ஈர்ப்பு பேரணி மற்றும நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

முன்னாள் கவுன்சிலர் சம்பத்குமார் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ள சொத்து வரி விதிப்பை விட, பொள்ளாச்சி நகராட்சியில் சொத்து வரி விதிப்பானது மிகவும் அதிகம். நகரில் உள்ள கட்டிடங்கள் பெரும்பாலும் காலியாக தான் உள்ளது. அதிக சொத்து வரி விதிப்பு, குடிநீர் வரி அதிகரிப்பு, குப்பை வரி, பாதாள சாக்கடை கட்டணம் மற்றும் அதற்கான வைப்பு தொகை ஆகியவை பொதுமக்களுக்கு பொருளாதார சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் சொத்து வரி மறுசீராய்வு மற்றும் வீதிகள் மண்டல மறுசீராய்வு போன்ற நடவடிக்கைகள் எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல் உள்ளது. எனவே புதிய சொத்து வரி மறு சீராய்வு மற்றும் தெருக்கள் மண்டல மறு சீராய்வுகளை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story