மதுரை விமான நிலையத்தில் ரூ.90 லட்சம் வெளிநாட்டு பணம் சிக்கியது; 2 பேர் கைது


மதுரை விமான நிலையத்தில் ரூ.90 லட்சம் வெளிநாட்டு பணம் சிக்கியது; 2 பேர் கைது
x
தினத்தந்தி 23 Oct 2018 11:00 PM GMT (Updated: 23 Oct 2018 8:07 PM GMT)

மதுரை விமான நிலையத்தில் ரூ.90 லட்சம் வெளிநாட்டு பணம் சிக்கியது. அதனை சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற சென்னையை சேர்ந்தவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை,

மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் விமானத்தில் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை, சுங்க புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். மதுரையை சேர்ந்த ரபீக்ராஜா (வயது 42) மற்றும் சென்னையை சேர்ந்த பிரேம்நசீர் ஆகியோர் வைத்திருந்த அட்டைப்பெட்டிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது அதில் ஹவாலா பணம் கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்ததுடன், அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

இதுகுறித்து சுங்க புலனாய்வு துறை அதிகாரிகள் கூறியதாவது:–

ரபீக் ராஜா கொண்டு வந்த அட்டை பெட்டியில் உளுந்தம் பருப்பு இருந்தது. அதனை ஸ்கேன் செய்தபோது அதில் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும் அந்த அட்டை பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் ரூ.90 லட்சம் மதிப்பில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 5 வெளிநாடுகளின் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதேபோல், பிரேம் நசீர் கொண்டு வந்த அட்டை பெட்டியில் திண்பண்டங்கள் இருந்தன. அந்த பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் இந்திய பணம் ரூ.30 லட்சம் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மொத்தம் ரூ.1 கோடியே 20 லட்சம் ஹவாலா பணம் சிக்கி உள்ளது.

இந்த பணம் அவர்களுக்கு எப்படி கிடைத்தது? அதனை யாருக்கு கொண்டு செல்ல முயன்றார்கள்? என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story