லஞ்ச வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் சிக்கிய விவகாரம்: மோடி அரசு மீது சரத்பவார் கடும் தாக்கு


லஞ்ச வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் சிக்கிய விவகாரம்: மோடி அரசு மீது சரத்பவார் கடும் தாக்கு
x
தினத்தந்தி 24 Oct 2018 4:45 AM IST (Updated: 24 Oct 2018 1:43 AM IST)
t-max-icont-min-icon

லஞ்ச வழக்கில் சி.பி.ஐ.அதிகாரிகள் சிக்கிய விவகாரத்தில் பிரதமர் மோடி அரசை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கடுமையாக தாக்கியுள்ளார்.

மும்பை,

மத்திய புலனாய்வு அமைப்பு(சி.பி.ஐ.) இயக்குனரான அலோக் வர்மாவும், சிறப்பு இயக்குனரான ராகே‌ஷ் அஸ்தானாவும் சமீபத்தில் லஞ்ச வழக்கில் சிக்கினர்.

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பிரதமர் மோடி 2014-ம் ஆண்டு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. ஆனால் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தன்னால் முடிந்த அளவிற்கு சிறப்பான ஆட்சியை கொடுக்க முயற்சி செய்தார். அவரது செயல்பாடு சிறப்பாக இருந்தது.

ஆனால் தற்போது சூழல் சரியாக இல்லை. தற்போதைய அரசு செயல்திறன் மிக்கதாக இருந்தால், சி.பி.ஐ. உயர்மட்ட அதிகாரிகள் மீது லஞ்சம், ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுந்திருக்காது. மோடி இந்த விவகாரத்தில் வாய்திறக்காமல் மவுனம் காக்கிறார். மோடி இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பா.ஜனதா கட்சியின் பலம் மிக்க தலைவராக விளங்கும் பிரதமர் மோடி, நாட்டிற்கு வலுவான தலைவராக இல்லை. பிரதமர் அலுவலகம் மட்டுமே தீர்மானிக்கும் சக்தியை பெற்றிருக்கிறது. அனைத்து முடிவுகளும் பிரதமர் அலுவலகத்தில் எடுக்கப்பட்டு கையெழுத்திற்காக மட்டுமே மந்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

நடப்பு அரசு மனதில் இருந்து பேசுங்கள்(மன் கி பாத்) நடத்திக்கொண்டு இருக்கிறது. ஆனால் அது மக்களின் குரலை(ஜன்கி பாத்) கேட்க மறுக்கிறது.

ரபேல் போர் விமானத்தின் விலை ரூ.570 கோடியில் இருந்து ரூ.1,600 கோடியாக உயர்த்தப்பட்டது ஏன்? என்று மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்தவேண்டும்.

போபர்ஸ் ஊழல் வழக்கிற்காக 3 வாரங்கள் நாடாளுமன்றத்தை முடக்கிய பா.ஜனதா அரசு தற்போது அதிகாரத்திற்கு வந்ததும் ஏன் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும். இவ்வாறு சரத்பவார் கூறினார்.

Next Story