தாமிரபரணி புஷ்கர விழா- தசரா விடுமுறை: மதுரை கோட்ட ரெயில்வேக்கு 4 நாட்களில் ரூ.2½ கோடி வருமானம்


தாமிரபரணி புஷ்கர விழா- தசரா விடுமுறை: மதுரை கோட்ட ரெயில்வேக்கு 4 நாட்களில் ரூ.2½ கோடி வருமானம்
x
தினத்தந்தி 24 Oct 2018 3:45 AM IST (Updated: 24 Oct 2018 1:54 AM IST)
t-max-icont-min-icon

தசரா விடுமுறை மற்றும் தாமிரபரணி புஷ்கர விழா கூட்டத்தால் மதுரை கோட்ட ரெயில்வேக்கு கடந்த 4 நாட்களில் ரூ.2 கோடியே 63 லட்சத்து 72 ஆயிரம் வருமானமாக கிடைத்துள்ளது. இதில் நெல்லை ரெயில் நிலையத்துக்கு மட்டும் சுமார் ரூ.48¾ லட்சம் வருமானமாக கிடைத்துள்ளது.

மதுரை,

தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்கள் வழக்கமாகவே பயணிகளின் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன.

இதற்கிடையே, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைக்காக சென்ற வாரம் 4 நாட்கள் தசரா விடுமுறை விடப்பட்டிருந்தது.

அத்துடன், தாமிரபரணி புஷ்கர விழாவும் நெல்லை மாவட்டம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால், இந்த ஆண்டு தசரா விடுமுறையில் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பொதுப்பெட்டிகளில் நிற்பதற்கு கூட இடமில்லாத அளவுக்கு பயணிகள் கூட்டம் இருந்தது. இதனால், மதுரை கோட்ட ரெயில்வேக்கு கடந்த 4 நாட்களில் பயணிகள் போக்குவரத்து மூலம் வழக்கத்துக்கு அதிகமாக வருமானம் கிடைத்துள்ளது.

குறிப்பாக, நெல்லையில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் அந்தியோதயா பொதுப்பெட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மேற்கண்ட 4 நாட்களும் பயணிகளின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. அதன்படி, நெல்லை-தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த 19-ந் தேதி 764 பயணிகள் பயணம் செய்தனர்.

அதன்மூலம் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 945 ரூபாய் வருமானமாக கிடைத்தது. 20-ந் தேதி ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்து 825, 21-ந் தேதி ரூ.3 லட்சத்து 24 ஆயிரத்து 500, 22-ந் தேதி ரூ.2 லட்சத்து 48 ஆயிரத்து 120 வருமானமாக கிடைத்துள்ளது.

அதேபோல, நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய ரெயில் நிலையங்களில் இருந்து கடந்த 4 நாட்களில் அந்தியோதயா ரெயிலில் 9 ஆயிரத்து 252 பயணிகள் பயணம் செய்துள்ளனர். அதன் மூலம் ரூ.13 லட்சத்து 82 ஆயிரத்து 740 ரூபாய் வருமானமாக கிடைத்துள்ளது.

தாமிரபரணி புஷ்கர விழாவை தொடர்ந்து நெல்லையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ரெயில்களில் பயணிகளின் கூட்டம் அதிக அளவு இருந்தது. அதன்படி, கடந்த 19-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரெயில்களில் 66 ஆயிரத்து 136 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.48 லட்சத்து 78 ஆயிரத்து 322 வருமானமாக கிடைத்துள்ளது.

தசரா விடுமுறை மற்றும் புஷ்கரணி விழாவை தொடர்ந்து கடந்த 19-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை மதுரை கோட்ட ரெயில்வேயில் இயக்கப்படும் ரெயில்களில் 4 லட்சத்து 97 ஆயிரத்து 798 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.2 கோடியே 63 லட்சத்து 72 ஆயிரம் வருமானமாக கிடைத்துள்ளது.

Next Story