ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அன்புமணி ராமதாஸ் பிரசார பயணம் ஜி.கே.மணி பேட்டி


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அன்புமணி ராமதாஸ் பிரசார பயணம் ஜி.கே.மணி பேட்டி
x
தினத்தந்தி 24 Oct 2018 4:30 AM IST (Updated: 24 Oct 2018 2:10 AM IST)
t-max-icont-min-icon

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி காவிரி டெல்டா மாவட்டங்களில் அன்புமணி ராமதாஸ் பிரசார பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், வருகிற 27-ந் தேதி இந்த பிரசார பயணம் தொடங்க உள்ளதாகவும் ஜி.கே.மணி கூறினார்.

கும்பகோணம்,

பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கும்பகோணத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் ரவிச்சந்திரன், சங்கர், மாவட்ட தலைவர் திருஞானம்பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கலந்துகொண்டு பேசினார். இதில் உழவர் பேரியக்க தலைவர் ஆலயமணி, மாநில அமைப்பு துணை செயலாளர் முருகன், நகர செயலாளர்கள் சுரேஷ், கவுரிசங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் செந்தில் நன்றி கூறினார்.


கூட்டத்துக்கு பின்னர் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


மத்திய அரசு காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த அனுமதி வழங்கி உள்ளது. இதனால் உணவு பற்றாக்குறை ஏற்படும். எனவே இந்த திட்டத்தை ரத்து செய்து காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். இதை வலியுறுத்தி பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வருகிற 27, 28, 29 ஆகிய தேதிகளில் காவிரி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்ய உள்ளார்.

வருகிற 27-ந் தேதி கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் அவருடைய பிரசார பயணம் தொடங்குகிறது. புவனகிரி, சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களை சந்தித்து, துண்டு பிரசுரங்கள் வழங்கி பேசுகிறார். அன்று இரவு கும்பகோணத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

28-ந் தேதி சுவாமிமலையில் பிரசார பயணம் தொடங்குகிறது. அன்று இரவு மயிலாடு துறையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். 29-ந் தேதி நாகை மாவட்டம் குத்தாலம், நீடூர், மணல்மேடு, சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், கொள்ளிடம் ஆகிய பகுதிகளில் பிரசார பயணம் மேற்கொள்ளும் அன்புமணி ராமதாஸ், சிதம்பரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

காவிரி நீர் பிரச்சினையில் தமிழக அரசு தனது உரிமையை இழந்து விட்டது. மற்ற மாநிலங்களிடம் கையேந்தும் நிலையில் தமிழகம் உள்ளது. காவிரி பிரச்சினையில் இழந்த உரிமையை மீட்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.2,500 கோடி நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக கவர்னர் காலம் தாழ்த்தி, ஒட்டு மொத்த தமிழக மக்களின் உணர்வுகளையும் புண்படுத்தி வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story