கவர்னரை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியமில்லை - சாமிநாதன் எம்.எல்.ஏ. அறிக்கை


கவர்னரை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியமில்லை - சாமிநாதன் எம்.எல்.ஏ. அறிக்கை
x
தினத்தந்தி 24 Oct 2018 4:30 AM IST (Updated: 24 Oct 2018 2:14 AM IST)
t-max-icont-min-icon

கவர்னரை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

புதுச்சேரி,

பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

முதல்–அமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்து வருகிறார். புதுச்சேரியில் மிக மோசமான நிர்வாகத்தை நாராயணசாமி நடத்தி வருகிறார். பிரதமர் கவர்னரை வைத்து நாடகம் ஆடுகிறார் என்று அவர் கூறியுள்ளார். பல கவர்னர்களை வைத்து ஆட்சி கலைப்பு நடத்துவது காங்கிரஸ் கட்சியின் கொள்கை.

கவர்னரை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் பாரதீய ஜனதாவுக்கு இல்லை. கேரளா, ஆந்திரா, பஞ்சாப், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கவர்னர்களால் என்ன பிரச்சினை என்பதை நாராயணசாமி விளக்க வேண்டும். தீபாவளிக்கு இன்னும் குறைந்த நாட்கள் உள்ள நிலையில் கூட்டுறவு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம், பல மாதங்களாக ஏழை மக்களுக்கு வழங்கப்படாமல் உள்ள இலவச அரிசி இதைப்பற்றியெல்லாம் துளிகூட யோசிக்காமல் கவர்னர் பெயரை மட்டும் தினசரி பயன்படுத்தி அரசியல் நடத்தி வருகிறார்.

தீபாவளி பண்டிகைக்கு ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இலவச சர்க்கரை குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. 15 நாட்களுக்கு முன்னதாக அரசு சார்பில் திறக்கப்படும் தீபாவளி சிறப்பங்காடி இன்னும் திறக்கப்படவில்லை. அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கான இலவச பொருட்களுக்கான கூப்பன் இதுவரை வழங்கப்படவில்லை.

பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால் வறுமையில் வாடும், அரசு பொதுத்துறை ஊழியர்கள், கூட்டுறவுத்துறை ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து துறை ஊழியர்கள் நடத்தும் போராட்டத்துக்கும் புதுவை பாரதீய ஜனதா முழுமையாக ஆதரவு அளிக்கும். நாராயணசாமிக்கு பொதுமக்களை பற்றி சிந்தனை செய்ய நேரமில்லை.

எந்த நேரமும் கவர்னரை பற்றி சிந்தனை செய்து தனது முதல்–அமைச்சர் பதவியை மறந்துவிட்டார். கவர்னர் கிரண்பெடி வந்த பிறகு அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்படுகிறது என்று அமைச்சர் கந்தசாமி கூறிவரும் நிலையில் அமைச்சர்களுக்கு எதிராக நாராயணசாமியின் கருத்துகளும், செயல்பாடுகளும் உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.


Next Story