காவிரி புஷ்கரம் ஓராண்டு நிறைவையொட்டி ஆதிநாயக பெருமாள்- தாயார் திருக்கல்யாணம்


காவிரி புஷ்கரம் ஓராண்டு நிறைவையொட்டி ஆதிநாயக பெருமாள்- தாயார் திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 23 Oct 2018 10:30 PM GMT (Updated: 23 Oct 2018 9:40 PM GMT)

காவிரி புஷ்கரம் ஓராண்டு நிறைவையொட்டி ஆதிநாயகபெருமாள்- தாயாருக்கு திருக்கல்யாணம் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீரங்கம்,

காவிரி மகா புஷ்கரம் ஓராண்டு நிறைவு விழா ஸ்ரீரங்கத்தில் கடந்த 21-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி அம்மா மண்டபம் சாலையில் உள்ள மாமுண்டி கோனார் திடலில் யாகசாலை அமைக்கப்பட்டு உற்சவர்கள் ஆதிநாயக பெருமாள் மற்றும் ஆதிநாயகித் தாயாரை எழுந்தருள செய்தனர். பின்னர் அங்கு பல்வேறு பூஜைகள், ஹோமங்கள் நடைபெற்று வருகின்றன. விழாவின் 3-வது நாளான நேற்று காலை 6 மணிக்கு யாகசாலையில் வீரலட்சுமி யாகம், சந்தான கோபால யாகமும், காலை 9 மணிக்கு துலா காவிரி மாஹாத்மியம் பாராயணம், மாலை 3.30 மணிக்கு ஸ்ரீஸ்துதி, பூஸ்துதி, கோதா ஸ்துதி பாராயணம், நாம சங்கீர்த்தனம் ஆகியவை நடைபெற்றது.

திருக்கல்யாணம்

பின்னர் மாலை 6 மணிக்கு அம்மாமண்டபம் படித்துறையில் காவிரி தாயாருக்கு துலா மாத ஆரத்தி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. அப்போது பக்தர்கள் காவிரி ஆற்றில் மலர் தூவி வணங்கினர். இதனையடுத்து யாகசாலை திடலில் கவிஞர் ஆர்.வி.ஸ்வாமி தொகுத்த 2017 மஹா புஷ்கர விழா உபன்யாச தொகுப்பு புத்தகம் வெளியிடப்பட்டது. புத்தகத்தை பராசர லட்சுமி நரசிம்ம பட்டர் வெளியிட அதை கோமடம் சடகோபன் பெற்றுக்கொண்டார். பின்னர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட ஆதிநாயக பெருமாள் மற்றும் ஆதிநாயகித் தாயாருக்கு இரவு 8 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

காவிரி மகா புஷ்கரம் ஓராண்டு நிறைவு விழாவின் கடைசி நாளான இன்று காலை 6 மணிக்கு நரசிம்ம, சுதர்சன, தன்வந்திரி யாகமும், காலை 9 மணிக்கு துலா காவிரி மாஹாத்மியம் பாராயணமும் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு காவிரி தாயாருக்கு பவுர்ணமி ஆரத்தி நடைபெறுகிறது. இத்துடன் காவிரி மகா புஷ்கரம் ஓராண்டு நிறைவு பெறுகிறது.


Next Story