சேலம் ரெயில்வே கோட்டத்தில் விதிமுறைகளை மீறியவர்களுக்கு ரூ.31¼ லட்சம் அபராதம்


சேலம் ரெயில்வே கோட்டத்தில் விதிமுறைகளை மீறியவர்களுக்கு ரூ.31¼ லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 24 Oct 2018 4:19 AM IST (Updated: 24 Oct 2018 4:19 AM IST)
t-max-icont-min-icon

சேலம் ரெயில்வே கோட்டத்தில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தல் என விதிமுறைகளை மீறியவர்களுக்கு ரூ.31¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

சூரமங்கலம்,

சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் டிக்கெட்டு எடுக்காமல் பயணிகள் ரெயிலில் செல்கிறார்களா? என ரெயில்வே அதிகாரிகள் அவ்வப்போது கண்காணித்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்தநிலையில் சேலம் ரெயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் விஜுவின் தலைமையில் டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் ஆகியோர் கொண்ட குழுவினர் கடந்த 10 நாட்கள் ரெயில் நிலையம் மற்றும் ரெயில்களில் பரிசோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின் போது டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்கள், முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுத்து முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்தவர்கள், அனுமதிக்கப்பட்ட எடையை விட அதிகமான பொருட்கள் எடுத்து சென்றவர்கள், குழந்தைகளுக்கான டிக்கெட் எடுத்து பெரியவர்கள் பயணம் செய்தது, படியில் அமர்ந்து பயணம் செய்தவர்கள் உள்பட விதிமுறைகளை மீறியவர்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 428 பேர் பிடிபட்டனர்.

இவர்களுக்கு ரூ.31 லட்சத்து 26 ஆயிரத்து 755 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், ரெயில்களில் பயணம் செய்பவர்கள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story