மைசூரு நகரில் துணிகரம் வீடு புகுந்து ரூ.5 லட்சம் நகை-பணம் திருட்டு


மைசூரு நகரில் துணிகரம் வீடு புகுந்து ரூ.5 லட்சம் நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 24 Oct 2018 4:20 AM IST (Updated: 24 Oct 2018 4:20 AM IST)
t-max-icont-min-icon

மைசூரு நகரில் வீடு புகுந்து ரூ.5 லட்சம் நகை-பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மைசூரு,

இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- மைசூரு நகர் ராமகிருஷ்ணா ‘ஜி’ பிளாக் 18-வது கிராசில் வசித்து வருபவர் கணேஷ். இவருடைய மனைவி வீணா. இவர்கள் கடந்த 16-ந்தேதி தசரா விடுமுறையையொட்டி தங்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தனர். இந்த நிலையில் அவர்கள் நேற்று முன்தினம் தங்கள் வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கணேஷ், வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது, வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோ உடைக்கப்பட்டு நகை-பணம் மாயமாகி இருந்தது. இதனால் யாரோ மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து, நகை-பணத்தை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

கணேசின் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள், பீரோவில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், பணம், கைக்கெடிகாரங்கள் ஆகியவற்றை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கணேஷ், குவெம்பு நகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாயும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். நாய் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

இதையடுத்து போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் மர்மநபர்களின் ரேகைகளை பதிவு செய்துகொண்டனர். இதுகுறித்து குவெம்பு நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story