சேலத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் - கலெக்டர் ரோகிணி ஆய்வு


சேலத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் - கலெக்டர் ரோகிணி ஆய்வு
x
தினத்தந்தி 24 Oct 2018 5:00 AM IST (Updated: 24 Oct 2018 4:34 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ரோகிணி ஆய்வு செய்தார்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் பலர் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று சேலம் புதிய பஸ்நிலையம் அருகே அரசு போக்குவரத்து கழக மெய்யனூர் பணிமனையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ரோகிணி ஆய்வு செய்தார்.

அங்கு நீர் சேமித்து வைக்கப்பட்ட தொட்டி, காலி டிரம்கள், பணிமனையை சுற்றியுள்ள பகுதிகளையும் பார்வையிட்டார். அப்போது காலி தொட்டிகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும் எனவும், காலி டிரம் உள்ளிட்டவற்றில் மழைநீர் தேங்காதவாறு பாதுகாப்பாக வைத்திட வேண்டும் எனவும், பணிமனையை சுற்றி சுத்தமாகவும் மற்றும் சுகாதாரமாகவும் வைத்து கொள்ள வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து சூரமங்கலம் நக்கீரர் தெருவில் உள்ள சமூக நலத்துறையின் அரசு சேவை இல்ல மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு படித்து வரும் மாணவிகளிடம் டெங்கு, சிக்குன் குனியா காய்ச்சல் மற்றும் பன்றிக்காய்ச்சல் குறித்தும் அது எவ்வாறு ஏற்படுகிறது என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

இதேபோல் அம்மாபாளையம் மெயின் ரோட்டில் தனியார் கடைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு நீர் சேமித்து வைக்கப்பட்டு உள்ளதா? என்பதையும், அதில் டெங்கு கொசு உற்பத்தி புழுக்கள் இருக்கிறதா என்பதையும் கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும் ரெட்டிப்பட்டி காவலர் குடியிருப்பையும் கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது உதவி கலெக்டர் (பயிற்சி) வந்தனா கார்க், சூரமங்கலம் மண்டல உதவி ஆணையர் ரமேஷ்பாபு உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story