லஞ்சம் வாங்கிய வழக்கில் மின்வாரிய ஊழியருக்கு 5 ஆண்டு சிறை - விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு


லஞ்சம் வாங்கிய வழக்கில் மின்வாரிய ஊழியருக்கு 5 ஆண்டு சிறை - விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு
x
தினத்தந்தி 24 Oct 2018 9:30 PM GMT (Updated: 24 Oct 2018 5:11 PM GMT)

லஞ்சம் வாங்கிய வழக்கில் மின்வாரிய ஊழியருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

விழுப்புரம், 


உளுந்தூர்பேட்டை தாலுகா ஆசனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 34). இவர் அதே கிராமத்தில் கடந்த 2009-ம் ஆண்டு புதியதாக வீடு கட்டினார்.

இந்த வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு ஆசனூரில் உள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தார். இவருடைய வீட்டிற்கு மின் இணைப்பு கொடுப்பதற்கு அதே பகுதியில் சென்ற உயர்அழுத்த மின்கம்பி இடையூறாக இருந்ததால் அதை வேறு இடத்திற்கு மாற்றி இணைப்பு கொடுக்கும்படி மின்வாரிய அலுவலகத்தில் அப்போதைய போர்மேனாக பணியாற்றி வந்த குமார் (53) என்பவரிடம் ராதாகிருஷ்ணன் முறையிட்டார்.

அதற்கு உயர்அழுத்த மின்கம்பி இணைப்பை மாற்று இடத்தில் வைப்பதற்காக ராதாகிருஷ்ணனிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது குமாரை விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து, குமார் துறை ரீதியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர் இந்த வழக்கு விழுப்புரம் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது.

இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பிரியா, குற்றம் சாட்டப்பட்ட மின்வாரிய ஊழியர் குமாருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும், இந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட குமார், கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story