சூலூரில் 3 பேர் கொலை வழக்கு: போலீஸ் காவல் முடிந்து மோகன்ராம் சிறையில் அடைப்பு


சூலூரில் 3 பேர் கொலை வழக்கு: போலீஸ் காவல் முடிந்து மோகன்ராம் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 25 Oct 2018 5:15 AM IST (Updated: 25 Oct 2018 12:20 AM IST)
t-max-icont-min-icon

சூலூரில் 3 பேர் கொலை வழக்கில் கைதான மோகன்ராமின் போலீஸ் காவல் முடிந்து நேற்று கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

சூலூர்,

சூலூர் அருகே உள்ள சிந்தாமணிபுதூர் பகுதியில் கடந்த 2015–ம் ஆண்டு 3 பேர் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக 21 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் கொலை வழக்கு தொடர்பாக 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மோகன்ராமை தனிப்பிரிவு போலீசார் மும்பையில் கைது செய்து, கோவை அழைத்து வந்தனர்.

சூலூர் குற்றவியல் கோர்ட்டில் மோகன்ராமை போலீசார் கடந்த 22–ந் தேதி ஆஜர்படுத்தினர். அப்போது மோகன்ராமை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சூலூர் போலீசார் மனு செய்தனர். மனுவை விசாரித்த சூலூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வேடியப்பன், 2 நாட்கள் மோகன்ராமை காவலில் எடுத்து விசாரிக்க சூலூர் போலீசாருக்கு அனுமதி வழங்கினார்.

நேற்று போலீஸ் காவல் முடிந்து, மோகன்ராமை போலீசார் சூலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற நவம்பர் 2–ந் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். இதையடுத்து மோகன்ராமை போலீசார் பலத்த காவலுடன் கோவை மத்திய சிறைக்கு கொண்டு சென்று, சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கின் காவல் விசாரணை குறித்து கருமத்தம்பட்டி உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு கூறும்போது, மோகன்ராமை கடந்த 2 நாட்களாக காவலில் எடுத்து விசாரித்ததில், மோகன்ராம் 3 பேரை கொலை செய்ய பயன்படுத்திய வெளிநாட்டு துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளார். கொலை செய்துவிட்டு துப்பாக்கியை சூலூர் அடுத்த பெருமாள் கோவில் அருகே உள்ள இடிந்த வீட்டில் குழி தோண்டி புதைத்துவிட்டு சென்றுவிட்டார்.

அவர் கூறிய தகவலின் படி அந்த துப்பாக்கியை போலீசார் கைப்பற்றினர். அதனோடு சேர்த்து 21 குண்டுகளையும் கைப்பற்றப்பட்டது. மேலும், செய்த கொலை குற்றத்தை ஒப்புக்கொண்ட மோகன்ராம், நண்பனுக்காக செய்தேன் என்று வாக்கு மூலம் கொடுத்து உள்ளார் என தெரிவித்தார்.

இந்த வெளிநாட்டு துப்பாக்கி அவருக்கு எப்படி கிடைத்தது. இல்லை யாரிடமாவது திருடி பயன்படுத்தினாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story