அந்தியூரில்: கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டது எப்படி? - கைதான 4 பேரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்


அந்தியூரில்: கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டது எப்படி? - கைதான 4 பேரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்
x
தினத்தந்தி 24 Oct 2018 9:45 PM GMT (Updated: 24 Oct 2018 7:14 PM GMT)

அந்தியூரில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டது எப்படி? என்பது குறித்து கைதான 4 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்து உள்ளது.

அந்தியூர், 

அந்தியூர் போலீசார் நேற்று முன்தினம் அந்தியூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பஸ்நிலையத்தில் உள்ள ஒரு பேக்கரியில் அந்தியூர் மைக்கேல்பாளையத்தை சேர்ந்த உத்தமராசு (வயது 42), ஈரோடு சுல்தான்பேட்டையை சேர்ந்த ராஜா என்கிற மொய்தீன் (41), நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை சேர்ந்த சுப்பையன் (67), அந்தியூர் மந்தையை சேர்ந்த கோவிந்தராஜ் (48) ஆகியோர் நீண்ட நேரமாக உட்கார்ந்து இருந்ததை பார்த்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் 4 பேரும் அந்தியூர் பகுதியில் ஏற்கனவே 25 இரண்டாயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டதும், மேலும் கையில் உள்ள 25 நோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்காக அந்தியூர் பஸ்நிலையத்தில் சுற்றியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர்களுக்கு யாரிடம் இருந்து கள்ளநோட்டுகள் வந்தது? எப்படி புழக்கத்தில் விட்டார்கள்? அவர்களே அடித்தார்களா? அல்லது வேறு யாராவது அடித்து அவர்களை புழக்கத்தில் விட வைத்தார்களா? என்று தீவிர விசாரணை நடத்தி வந்தார்கள். விசாரணையில் கிடைத்த திடுக்கிடும் தகவல்கள் வருமாறு:-

கடந்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி அன்று பங்களாப்புதூரில் உள்ள ஒரு ஓட்டலில் திருப்பூர் போயம்பாளையம் சக்திநகரை சேர்ந்த சதீஷ் (வயது 32), திருப்பூர் கணக்கம்பாளையத்தை சேர்ந்த கோகுல் (31), புஞ்சைபுளியம்பட்டி ஜே.ஜே.நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் (37)ஆகிய 3 பேர் சாப்பிட சென்றனர். சாப்பிட்டுவிட்டு 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டை ஓட்டல்காரரிடம் கொடுத்தபோது அவர் சந்தேகப்பட்டு அதை வாங்க மறுத்தார். இதனால் தப்பித்து ஓட முயன்ற 3 பேரையும் அங்கிருந்தவர்கள் பிடித்து பங்களாப்புதூர் போலீசில் ஒப்படைத்தனர். அதைத்தொடர்ந்து பங்களாப்புதூர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஸ்கேன் செய்து கலர் ஜெராக்ஸ் எடுத்து அதை புழக்கத்தில் விட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 3 பேரும், கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

பங்களாப்புதூரில் கைது செய்யப்பட்ட 3 பேரும், அந்தியூரில் பிடிபட்ட 4 பேரும் நண்பர்கள் ஆவார்கள். அந்த 3 பேரிடம் இருந்து இந்த 4 பேரும் கடந்த 1 மாதத்துக்கு முன்பே 50 இரண்டாயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளை வாங்கியுள்ளார்கள். அதில் 25 இரண்டாயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளை ஏற்கனவே அந்தியூர் பஸ்நிலையத்தில் புழக்கத்தில் விட்டனர். மீதியுள்ள 25 கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயன்றபோது 4 பேரும் போலீசாரிடம் சிக்கினார்கள்.

கைது செய்யப்பட்ட 4 பேரும் பவானி ஜே.எம். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் காவலில் கோபியில் உள்ள மாவட்ட ஜெயிலில் அடைக்கப்பட்டனர். 

Next Story