வளர்ச்சி பணிகள் குறித்து நீலகிரி மாவட்டத்தில் பாராளுமன்ற நிலைக்குழு ஆய்வு


வளர்ச்சி பணிகள் குறித்து நீலகிரி மாவட்டத்தில் பாராளுமன்ற நிலைக்குழு ஆய்வு
x
தினத்தந்தி 24 Oct 2018 11:00 PM GMT (Updated: 24 Oct 2018 7:21 PM GMT)

நீலகிரி மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து பாராளுமன்ற நிலைக்குழு ஆய்வு செய்தது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு பாராளுமன்ற நிலைக்குழு நேற்று வந்தது. குழு தலைவர் பி.வேணுகோபால் தலைமையில் உறுப்பினர்கள் ஏ.கே.செல்வராஜ், ஹரிச்சந்திரன் தவான், யஷ்வந்த் சிங் உள்பட 10 பேர் வந்து இருந்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் ரூ.2 கோடியே 42 லட்சத்து 8 ஆயிரம் செலவில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தனர். கோழிப்பண்ணை முதல் போலீஸ் குடியிருப்புகள் வரை ரூ.1 கோடியே 39 லட்சத்து 80 ஆயிரம் செலவில் 850 மீட்டர் தூரம் போடப்பட்ட சாலையை பார்வையிட்டனர்.

அதன்பிறகு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.27 லட்சத்து 70 ஆயிரம் செலவில் தொட்டபெட்டா ஊராட்சிக்கு உட்பட்ட மந்துமேல் வீடு பகுதி சாலையோரம் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை பாராளுமன்ற நிலைக்குழுவினர் தொடங்கி வைத்தனர். உல்லத்தி ஊராட்சி கவரட்டி பகுதியில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி மையத்தை திறந்து வைத்தனர்.

இதையடுத்து உல்லத்தி ஊராட்சி கல்லட்டி பகுதியில் 9 பயனாளிகளுக்கு தலா ரூ.12 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட தனிநபர் இல்ல கழிப்பிடங்களையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மசினகுடி ஊராட்சி வாழைத்தோட்டம் பகுதியில் ரூ.19 லட்சத்து 90 ஆயிரம் செலவில் நடைபெற்று வரும் 800 மீட்டர் தூரத்துக்கு அகழி வெட்டும் பணியையும் பாராளுமன்ற நிலைக்குழுவினர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து முதல்–அமைச்சரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் 8 பயனாளிகளுக்கு ரூ.16 லட்சத்து 80 ஆயிரம் செலவில் கட்டப்படும் வீடுகளை பார்வையிட்டனர்.

பின்னர் கடநாடு ஊராட்சிக்கு உட்பட்ட சொக்கநள்ளியில் இருளர் இன பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட 2 மாட்டு கொட்டகைகள் என மொத்தம் ரூ.2 கோடியே 42 லட்சத்து 8 ஆயிரம் செலவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பாராளுமன்ற நிலைக்குழுவினர் ஆய்வு செய்தனர்.

அப்போது ஊரக வளர்ச்சி முகமை மற்றும் உள்ளாட்சி துறை இயக்குனர் பாஸ்கரன், மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, கூடுதல் இயக்குனர்கள் லட்சுமிபதி, ரபீக், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, உதவி செயற்பொறியாளர் பசுபதி உள்பட அரசு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story