விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவது குறித்து நீதிபதி ஆய்வு நடத்த வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு


விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவது குறித்து நீதிபதி ஆய்வு நடத்த வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 25 Oct 2018 4:00 AM IST (Updated: 25 Oct 2018 1:35 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவது குறித்து நீதிபதி ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

விருதுநகர் மாவட்டத்தில் குண்டாறு, கிருதுமால் நதி ஆகிய ஆற்றுப்படுகைகளில் சவடு மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அங்கு சவடு மண் அள்ளுவதற்கு பதிலாக ஆற்று மணலை அள்ளி வருவதாகவும், இதை தடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன.

அந்த மனுக்களில், சவடு மண் என்ற பெயரில் மணல் அள்ளுவதால் அரசுக்கு வரி செலுத்துவது இல்லை. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மணல் கொள்ளைக்கு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுக்கக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, காரியாபட்டி, அருப்புக்கோட்டை மற்றும் குண்டாறு, கிருதுமால் நதி ஆகிய பகுதிகளில் சவடு மண் அள்ள அனுமதி பெற்றுவிட்டு சட்டவிரோதமாக மணல் அள்ளுவதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுக்களில் கூறியிருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், விருதுநகர் மாவட்டத்தில் சவடு மண் அள்ளுவதற்கு அனுமதி பெற்றுவிட்டு, சட்டவிரோதமாக ஆற்று மணல் அள்ளப்படுகிறதா என்பது குறித்து மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story