பிடிவாரண்டு உத்தரவுகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும்; போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவு


பிடிவாரண்டு உத்தரவுகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும்; போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 25 Oct 2018 4:00 AM IST (Updated: 25 Oct 2018 1:35 AM IST)
t-max-icont-min-icon

பிடிவாரண்டு உத்தரவுகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என போலீசாருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிக்க ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டு பிறப்பித்த கீழ்கோர்ட்டு உத்தரவுகளை நிறைவேற்றிட, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த போலீசார் தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் விசாரித்து, மதுரை ஐகோர்ட்டு எல்லைக்கு உட்பட்ட 13 மாவட்டங்களில் நிலுவையில் உள்ள ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு உத்தரவு விவரங்களை தாக்கல் செய்ய அந்தந்த மாவட்ட கோர்ட்டுகளுக்கும், போலீசாருக்கும் உத்தரவிட்டார். அதன்படி உரிய விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதையடுத்து நீதிபதி டி.கிருஷ்ணகுமார் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

13 மாவட்டத்திலும் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகள் மொத்தம் 21,129 என்று கோர்ட்டுகள் சார்பிலும், 13,108 வாரண்டுகள் தான் நிலுவையில் உள்ளன என்று போலீஸ் தரப்பிலும் அறிக்கை அளித்துள்ளனர். இருதரப்பினரும் தாக்கல் செய்த அறிக்கைகளில் எண்ணிக்கை பெருமளவில் வேறுபட்டு உள்ளன.

வாரண்டு உத்தரவுகள் நீண்டநாளாக நிலுவையில் இருந்தால், சம்பந்தப்பட்ட வழக்குகளை முடிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல் நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இதை தவிர்க்க ஒவ்வொரு மாவட்டத்திலும் உதவி போலீஸ் சூப்பிரண்டு அல்லது துணை போலீஸ் சூப்பிரண்டுகள் இந்த வாரண்டுகள் தொடர்பாக ஆய்வு நடத்தி ஐ.ஜி.க்கு அறிக்கை தாக்கல் செய்யவும், அதை அவர் டி.ஜி.பி.க்கு அனுப்ப வேண்டும் என்றும் டி.ஜி.பி. சார்பில் 26.7.2018 அன்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. எனவே ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டு விவரங்களை போலீசாரிடம் மாவட்ட கோர்ட்டுகள் தெரிவித்து, அதன் அடிப்படையில் பிடிவாரண்டு உத்தரவுகளை நிறைவேற்றியது தொடர்பான விவரத்தை ஐகோர்ட்டில் போலீசார் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Next Story