கூடுதல் பஸ் இயக்கக்கோரி மாணவர்களை மாட்டு வண்டியில் ஏற்றி நூதன போராட்டம்


கூடுதல் பஸ் இயக்கக்கோரி மாணவர்களை மாட்டு வண்டியில் ஏற்றி நூதன போராட்டம்
x
தினத்தந்தி 25 Oct 2018 4:15 AM IST (Updated: 25 Oct 2018 1:51 AM IST)
t-max-icont-min-icon

கூடுதல் பஸ் இயக்கக்கோரி மாணவர்களை மாட்டு வண்டியில் ஏற்றி பொதுமக்கள் நூதனபோராட்டத்தில் ஈடுபட்டனர்.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், வேட்டைகுடி கிராமத்தை சுற்றி மலத்தாங்குலம், அயன் சுத்தமல்லி, எரக்குடி, ஆங்கீனூர், கொரத்தகுடி ஆகிய 5 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்வதற்கு 5 கிலோ மீட்டர் நடந்து சென்று கீழப்பழுவூர் பஸ் நிலையத்திற்கு செல்கின்றனர். பின்னர் அங்கிருந்து பஸ் மூலம் வெளியிடங்களுக்கு சென்று வருகின்றனர். இந்த கிராமங் களுக்கு ஒரு பஸ் மட்டும் காலையில் மட்டும் வரும்.

அந்த பஸ்சும் சில நாட்களுக்கு வருவதில்லை. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், வெளியூர்களுக்கு வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மாணவர்கள் பள்ளிக்கு சரியான நேரத்திற்கும் செல்ல முடியவில்லை. பள்ளி முடிந்து வீட்டிற்கு வர முடியவில்லை. இந்நிலையில், வேட்டைகுடி கிராமம் உள்ளிட்ட கிராமங் களுக்கு கூடுதல் பஸ் இயக்கக்கோரி பள்ளி மாணவர்களை மாட்டு வண்டியில் ஏற்றி சென்று பள்ளியில் விடுவதை போன்ற நூதன போராட்டத்தில் பொதுமக்கள் ஈடு பட்டனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், கீழப்பழுவூரில் இருந்து மனத்தாங்குலம், அயன் சுத்தமல்லி, எரக்குடி, வேட்டைகுடி, ஆங்கீனூர், கொரத்தகுடி வழியாக டால்மியாபுரம் வரை காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளைகளிலும் கூடுதல் பஸ் வசதி செய்து தர வேண்டும். மாமன்னன் ராஜராஜ சோழனின் சிலையை தஞ்சையில் வான்உயரம் எழுப்பவும், தமிழகத்தை பாலை வனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசிடமும் கோரிக்கை வைத்து இந்த நூதன போராட்டம் நடத்தினோம் என்று கூறினர்.

இந்த போராட்டத்தில் அகில இந்திய மக்கள் இயக்க மாநில தலைவர் தங்க சண் முகசுந்தரம், தே.மு.தி.க. திருமானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், அழகேசன், மகளிர் சுய உதவி குழு சித்ரா, வசந்தி மற்றும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Next Story