வாலிபர் சாவில் திடீர் திருப்பம்: கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் மதுவில் விஷம் கலந்து கொன்றது அம்பலம்


வாலிபர் சாவில் திடீர் திருப்பம்: கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் மதுவில் விஷம் கலந்து கொன்றது அம்பலம்
x
தினத்தந்தி 25 Oct 2018 4:15 AM IST (Updated: 25 Oct 2018 1:55 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே வாலிபர் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதலை கைவிட மறுத்ததால் மதுவில் விஷம் கலந்து அவரை கொன்ற கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூரை அடுத்த கொப்பூரை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 33). தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

குணசேகரன் கடந்த 24-5-2018 அன்று வழக்கம் போல் வேலைக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் 26-5-2018 அன்று அவர் கொப்பூர் ஏரி அருகே உள்ள மாந்தோப்பில் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

இது குறித்து மணவாள நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக குணசேகரனை கொன்றது அதே ஊரை சேர்ந்த தனசேகர் (40), அவருடைய மனைவி மஞ்சுளா (30) என தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அப்போது தனசேகர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-

குணசேகரனுக்கும், மஞ்சுளாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதனால் இருவரையும் தனசேகர் கண்டித்தார். எனினும் குணசேகரன் கள்ளக்காதலை கைவிட மறுத்து மஞ்சுளாவுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார்.

இது குறித்து மஞ்சுளா, தன் கணவரிடம் கூறியுள்ளார். இதனால் குணசேகரனை கொலை செய்ய இருவரும் திட்டம் தீட்டினர். அதன்படி 24-5-2018 அன்று கொப்பூர் ஏரி அருகே உள்ள மாந்தோப்புக்கு குணசேகரனை மஞ்சுளா அழைத்தார்.

அங்கு வந்த குணசேகரனுக்கு தன் கணவர் ஏற்பாட்டின்படி விஷம் கலந்த மதுவை மஞ்சுளா கொடுத்தார். அதை குடித்த குணசேகரன் சிறிது நேரத்தில் இறந்தார். உடனே கணவன், மனைவி இருவரும் அங்கிருந்து எதுவும் தெரியாதது போல சென்று விட்டனர்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

இதையடுத்து குணசேகரனை கொன்ற வழக்கில் தனசேகர், மஞ்சுளா ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Next Story