புகையிலை பொருட்கள் பதுக்கிய வாலிபர் கைது: 7 மூட்டைகள் பறிமுதல்
திண்டுக்கலில் புகையிலை பொருட்கள் பதுக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து 7 மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் ஆர்.வி.நகர் கந்தகோட்டம் சாலையை சேர்ந்த ஷாகிர் உசேன் மகன் அப்துல் காதர் என்ற ஜான் (வயது 20). இவர், கடைகளுக்கு மொத்தமாக பீடி, சிகரெட் வினியோகம் செய்து வருகிறார்.
இந்தநிலையில், அப்துல் காதரின் வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திண்டுக்கல் தெற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிசெல்வி தலைமையிலான போலீசார் நேற்று காலை அவருடைய வீட்டுக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது, 7 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட 3 வகையான புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, வீட்டில் இருந்த அப்துல் காதரை போலீசார் கைது செய்தனர். மேலும், 7 மூட்டை புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர், அப்துல் காதரை திண்டுக்கல் 3-வது மாஜிஸ்திரேட்டு தீபா முன்னிலையில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story