மணல் கடத்தலை தடுப்பதற்காக சாலையில் பள்ளம் தோண்டிய பொதுப்பணித்துறையினர்


மணல் கடத்தலை தடுப்பதற்காக சாலையில் பள்ளம் தோண்டிய பொதுப்பணித்துறையினர்
x
தினத்தந்தி 25 Oct 2018 4:30 AM IST (Updated: 25 Oct 2018 2:02 AM IST)
t-max-icont-min-icon

கறம்பக்குடியில் மணல் கடத்தலை தடுப்பதற்காக பொதுப்பணித்துறையினர் சாலையில் பள்ளம் தோண்டியதால் மயான கொட்டகைக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அக்னி ஆற்றில் இருந்து தினமும் லாரிகளில் மணல் கடத்தப்பட்டு வெளியூர்களுக்கு கொண்டு செல்லப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் செய்தனர். மேலும் கறம்பக்குடி வருவாய்த் துறையினர், பொதுப்பணித் துறையினர் மணல் கடத்தலை கண்டு கொள்ளவில்லை எனவும் அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்தநிலையில் கறம்பக்குடி தென்னகர் பகுதியில் இருந்து காட்டாற்றுக்கு செல்லும் மண் சாலையின் நடுவே சில தினங்களுக்கு முன்பு பொதுப்பணித்துறையினர் பள்ளம் தோண்டினர். இதன் மூலம் அப்பகுதி வழியாக மணல் கடத்துவது தடுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

ஆனால் அந்த மண்சாலையில் லாரிகளோ, டிராக்டர் களே இயக்கப்படுவதில்லை எனவும் காட்டாற்றுக்கு அருகே உள்ள மயான கொட்டகை மற்றும் அப்பகுதியில் உள்ள வயல்களுக்கு செல்லும் சாலையாகவே அந்த சாலை உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மணல் கடத்தப்படும் வழித்தடங்களை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டு, கண் துடைப்பிற்காக மயான கொட்டகைக்கும், வயலுக்கு செல்லும் சாலையை சேதப்படுத்தி இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். எனவே பொதுப்பணித்துறையினரால் தவறாக தோண்டப்பட்ட பள்ளத்தை சரி செய்து, மயான கொட்டகைக்கும், வயல் பகுதிகளுக்கும் பொதுமக்கள், விவசாயிகள் சென்று வர நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story