கடன் தகராறில் வாலிபரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை காஞ்சீபுரம் கோர்ட்டு தீர்ப்பு


கடன் தகராறில் வாலிபரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை காஞ்சீபுரம் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 25 Oct 2018 4:00 AM IST (Updated: 25 Oct 2018 2:05 AM IST)
t-max-icont-min-icon

கடன் தகராறில் வாலிபரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து காஞ்சீபுரம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியை சேர்ந்தவர் ஷேக்பரீத் (வயது 24). திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பகுதியை சேர்ந்தவர் முருகையா (42), இருவரும் காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு ஜவுளி கடையில் ஊழியராக வேலை செய்து வந்தனர். இவர்கள் காஞ்சீபுரம் எம்.எம்.அவென்யூவில் தங்கி வேலைக்கு சென்று வந்தனர்.

இந்த நிலையில், ஷேக்பரீத் கடனாக முருகையாவிடம் ரூ.50 ஆயிரம் கொடுத்தார். கொடுத்த கடனை ஷேக்பரீத், முருகையாவிடம் பலமுறை கேட்டாராம். இதனால் கடந்த 12.02.2013 அன்று அவர்கள் தங்கி இருந்த வீட்டில் தகராறு மூண்டது.

அப்போது ஆத்திரம் அடைந்த முருகையா அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து ஷேக்பரீத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் ஷேக்பரீத் அதே இடத்தில் உயிரிழந்தார்.

இதுகுறித்து சின்ன காஞ்சீபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகையாவை கைது செய்தனர்.

இந்த வழக்கு, காஞ்சீபுரத்தில் உள்ள மாவட்ட செசன்சு கோர்ட்டு 2-ல் நடந்து வந்தது. அரசு தரப்பில், அரசு வழக்கறிஞர் அய்யம்பேட்டை கே.சம்பத் ஆஜரானார். வழக்கை விசாரித்த காஞ்சீபுரம் மாவட்ட செசன்சு நீதிபதி ஜி.கருணாநிதி, ஷேக்பரீத்தை கொலை செய்த முருகையாவுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இதையடுத்து முருகையாவை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story